PUBLISHED ON : ஆக 26, 2011 12:00 AM

தி.மு.க., அரசு முறைகேட்டை, மழுப்பும் மந்திரி!
''புகாரில் சிக்கிய ஆளுங்கட்சி பிரமுகரை, அலாக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிண்டு போயிட்டா ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''மேலிடத்துல இருந்து உடனே போன் வந்திருக்கும்... டீ, காபி வாங்கிக் கொடுத்து, ராஜ மரியாதையுடன் திருப்பி அனுப்பி வைச்சிருப்பாங்களே...'' என்றார் அந்தோணிசாமி.
''அது தான் கிடையாது ஓய்... சென்னை, அசோக்நகர் ஸ்டேஷனுக்கு வந்த கட்சிக்காரர், 'நான் யார் தெரியுமா'ங்கற வழக்கமான தொனியில ஆரம்பிச்சு, பெரிய ரகளையில ஈடுபட்டிருக்கார்... அதுவரை அமைதியா இருந்த இன்ஸ்பெக்டர், லத்தியை எடுத்து பின்னி எடுத்துட்டாராம்... கை, காலெல்லாம் வீங்கிய நிலையில, உதவி கமிஷனர் அறையில, கட்சிப் பிரமுகர் தஞ்சம் அடைஞ்சிருக்கார்...
''நேர்மையானவர் என பெயரெடுத்த இன்ஸ்பெக்டரிடம், உதவி கமிஷனர் சமாதானம் பண்ண முயற்சி பண்ணிருக்கார்... கோபமான இன்ஸ்பெக்டர், 'என்னை வேலை செய்ய விடாம இடையூறு செய்த கட்சிக்காரர் மீது புகார் கொடுக்கறேன்... நடவடிக்கை எடுக்க நீங்க தயாரா?'ன்னு கேட்டு, உதவி கமிஷனரை வாயடைக்க வைச்சுட்டாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எதுக்கும் இன்ஸ்பெக்டர், பெட்டி, படுக்கையுடன் தயாரா இருக்கறது நல்லதுங்க...'' என, 'கமென்ட்' அடித்தார் அந்தோணிசாமி.
''நேரடியா பதில் சொல்லாம அமைச்சர் மழுப்பிட்டாரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்
அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''சட்டசபையில, மின்துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தப்ப, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி எழுந்து, 'முந்தைய ஆட்சியில, இந்தோனேசியாவுல இருந்து நிலக்கரி இறக்குமதி செஞ்சதுல முறைகேடு நடந்திருக்குன்னு பேச்சு அடிபடுது... இது தொடர்பா விசாரணை நடத்தப்படுமா'ன்னு கேட்டாரு பா...
''அதுக்கு, அமைச்சர் முதல்ல சரியா பதில் தரலைன்னதும், மீண்டும் அழுத்தி கேட்டாரு... அதுக்கு, 'மத்திய அரசுதான் நிலக்கரி தருது...
மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட முடியாது'ன்னு சொல்லி, அமைச்சர் மழுப்பிட்டாரு பா... தி.மு.க., ஆட்சியில நடந்ததைச்சொல்ல, அமைச்சர் ஏன் தயங்கணும்னு, துறை அதிகாரிகள் பேசிக்கறாங்க...'' என்றார் அன்வர்பாய்.
''தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒரே மேடையில ஏறப் போறாங்களாம்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
''எதுக்கு ஓய்...'' என்று விசாரித்தார் குப்பண்ணா.
''விழுப்புரத்துல, வர்ற 30ம் தேதி, ஸ்டாலின் தலைமையில பொதுக்கூட்டம் நடக்குதுங்க... 'சட்டசபையில ஜனநாயகம் படும் பாடு'ங்கற தலைப்புல, கூட்டம் நடத்தப் போறாங்க... கருணாநிதியைத் தவிர, மற்ற எல்லா எம்.எல்.ஏ.,க்களும் கலந்துட்டு, ஆளுங்கட்சியை ஒரு பிடி பிடிக்கப் போறாங்களாம்ங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக்கட்ட, மற்றவர் களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.