பூத் சிலிப்: 2,251 ஊழியர்கள் பங்கேற்பு
பூத் சிலிப்: 2,251 ஊழியர்கள் பங்கேற்பு
பூத் சிலிப்: 2,251 ஊழியர்கள் பங்கேற்பு
ADDED : அக் 13, 2011 08:31 AM

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் 2,251 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதன்படி, 17ம் தேதி திருவள்ளூர் நகராட்சி, ஆரணி, பொதட்டூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய ஊர்களில் நகராட்சிகளுக்கும், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூண்டி, ஆர்.கே.பேட்டை, சோழவரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றன.
ஆக.,19ம் தேதி திருத்தணி நகராட்சி, திருமழிசை நகராட்சிகளுக்கும், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி மற்றும் பூந்தமல்லியில் ஒரு சில பகுதிகள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றன.
வாக்காளர்கள் எண்ணிக்கை: மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளில், 1,85,576 ஆண் வாக்காளர்களும் 1, 79,625 பெண் வாக்காளர்களும் 27 திருநங்கைளும் உள்ளனர். பூத் சிலிப் வினியோகம்: இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும் போது, 'உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 941 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான பூத் சிலிப் வழங்கும் பணியில், 2 ஆயிரத்து 251 ஓட்டுச்சாவடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுதோறும் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார இறுதிக்குள் இப்பணி நிறைவடையும்,'' என்றார்.


