PUBLISHED ON : செப் 05, 2011 12:00 AM

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
பார்லிமென்டில் தற்போது நடந்து வரும் மழைக்கால கூட்டத் தொடரில், மிகவும் பிரபலமடைந்துள்ளவர் யார் தெரியுமா? காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா தான்.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, லோக்சபாவில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடந்த விவாதத்தில் அனல் பறந்தது. எதிர்க்கட்சியினரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஆளுங்கட்சியினர் திணறினர். காங்., பொதுச் செயலர் ராகுல் பேசியபோதும், எதிர்க்கட்சியினர் அடிக்கடி குறுக்கிட்டு, அவரை வெறுப்பேற்றினர். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையின் போதெல்லாம், காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது, பிரணாப் முகர்ஜி தான். ஆனால், இந்த முறை, பிரணாப் கூட திணறி விட்டார். யாரும், சற்றும் எதிர்பாராத வகையில், இளம் தலைவரான ஜோதிராதித்யா, ஆவேசமாக எழுந்து, எதிர்க்கட்சியினருக்கு, தன் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். குறிப்பாக, ராகுலின் பேச்சுக்கு, எதிர்க்கட்சியினர் இடையூறு ஏற்படுத்திய போதெல்லாம், ஜோதிராதித்யா முதல் ஆளாக எழுந்து, தக்க பதிலடி கொடுத்தார். அவரின் ஆவேசத்தை கண்டு, காங்., கட்சியின் மூத்த தலைவர்களாலேயே, நம்ப முடியாமல், தங்களின் கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். பா.ஜ., வினரோ, 'பரவாயில்லையே, மாதவ்ராவ் சிந்தியாவின் மகன், லோக்சபாவில் மிகவும் தீவிரமாக செயல்படுகிறார்' என, ஆச்சர்யப்பட்டனர். 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா' என, சட்டைக் காலரை தூக்கி விட்டபடி, பெருமையடிக்கின்றனர், காங்., கட்சியினர்.


