பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் நன்றாக ஒத்துழைக்கிறதாம் பாகிஸ்தான்: ஹிலாரி சர்டிபிகேட்
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் நன்றாக ஒத்துழைக்கிறதாம் பாகிஸ்தான்: ஹிலாரி சர்டிபிகேட்
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் நன்றாக ஒத்துழைக்கிறதாம் பாகிஸ்தான்: ஹிலாரி சர்டிபிகேட்

வாஷிங்டன்: பயங்கரவாத தொடர்புகளை வேரறுப்பதிலும், தடுப்பதிலும் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் சிறப்பாக ஒத்துழைக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சர்டிபிகேட் அளித்துள்ளார்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, பல மில்லியன் டாலர்களை அள்ளித்தருகிறது. இதை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக ஆயுதங்களை வாங்கிக்குவிக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பணம் அளிக்க ஒவ்வொரு ஆண்டும், பயங்கரவதாதத்திற்கெதிரான பாகிஸ்தானின் நிலை குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்து அமெரிக்க காங்கிரசுக்கு சர்டிபிகேட் ஒன்று அளிக்கப்படவேண்டும். இது இருந்தால் மட்டுமே, பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ரேமண்ட் டேவிஸ் என்பவர், லாகூரில் இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. ரேமண்டை கைது செய்த பாகிஸ்தான் அவரை சிறையில் அடைத்தது. ரேமண்டை விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான நிதியுதவியில் மூன்றில் ஒருபகுதியை நிறுத்தி வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒபாமா நிர்வாகம் அறிவித்தது. இதற்கு ரேமண்ட் விவகாரமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சற்று இறங்கி வந்த பாகிஸ்தான், ரேமண்டை கடந்த 2 நாட்களுக்கு முன் விடுவித்தது. இதையடுத்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு சிறப்பாக ஒத்துழைப்பதாக கூறி, அமெரிக்க பார்லிமென்டுக்கு ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால், பாகிஸ்தானுக்கு இனி அமெரிக்க நிதியுதவி தாராளமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்படும் என்று அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியதலைவர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சி தான். அதுவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்டிபிகேட் அளித்த ஹிலாரி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், இந்த செய்தி இந்திய அமெரிக்க உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போக தெரியும்.