அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்
அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்
அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்

நேவார்க் : அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து, கட்டாயமாக வெளியேற்ற முயன்றது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.
இதைத் தவிர, சமூக வலைதளத்தில், அமெரிக்காவுக்கு எதிராகவும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்தும் பதிவிட்டவர்களையும் குறிவைத்து, கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இந்தாண்டு ஜனவரியில் இருந்து, 1,085 இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும், அங்குள்ள, எம்.ஐ.டி.,யில் படித்த இன்ஜினியர் குணால் ஜெயின் என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் நேவார்க் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது, அந்த விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவரை, போலீசார் தரையில் மண்டியிட வைத்தனர். அவருடைய கையில் விலங்கும் போடப்பட்டிருந்தது.
கண்ணீருடன், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அந்த மாணவர் கதறியது, இதயத்தை கசக்கி பிழிவதாக உள்ளது. அவர் ஹரியானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியராக, எந்த உதவியையும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில் இருந்தேன்.
இதுபோன்று, மனிதநேயம் இல்லாமல், இந்திய மாணவர்கள், கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பது, இந்தியாவில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை.
இதுபோன்ற இந்திய மாணவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி, குற்றவாளி போல் நடத்தி, இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தப் பதிவில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க துாதர் உள்ளிட்டோரையும் அவர் இணைத்துள்ளார்.