சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது
சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது
சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது

சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேகாங் பகுதியில் உள்ள, 'இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ்' படைக்குச் சொந்தமான இரண்டு கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் டில்லி, உ.பி., பீகார், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டன. அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலும் உணரப்பட்டது.
பலி எவ்வளவு: நிலநடுக்கத்தினால் சிக்கிமில் -41, பீகாரில் -7, மேற்கு வங்கத்தில் -9 அண்டை நாடான நேபாளம் மற்றும் திபெத்தில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டினர் மீட்பு: சிக்கிம் மாநிலம் வடக்கு பகுதியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 15 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 150 கிராம மக்களை இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கேங்டாக் அருகில் உள்ள மாங்கன் பகுதியில் அமைந்துள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிக்கிமின் பிகாங் பகுதியில் 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300 எல்லைப்பாதுகாப்பு படையினர் சிலிகுரி மற்றும் கவுகாத்தி பகுதிகளில் மருத்துவர்களுடன் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு உதவி: நிலநடுக்கம்ஏற்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங், சிக்கிம் மாநில முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். பின்னர் பேரிடர் மேலாண் அமைப்பு கூட்டத்தை உடனடியாக கூட பிரதமர் கேபினட் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கூட்டம் கூடி அவசர ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கேபினட் செயலாளர் அஜித் சேத் கூறுகையில், சிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு விமானப்படை விமானத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோல்கட்டாவுக்கு 5 குழுவினர் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும் நிவாரண பணிகளில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் தற்போது நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
மீட்பு பணியில் விமானப்படை விமானங்கள் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான 5 விமானங்கள், கோல்கட்டா, பாலம் மற்றும் ஹின்டாங் ஆகிய பகுதிகளில் இருந்து சென்றுள்ளது. இதனிடையே சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதவி செய்ய தயார்-நரேந்திர மோடி: நிலநடுக்கம் ஏற்பட்ட தகவலறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி கவலையடைய செய்தது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய குஜராத் மாநிலம் தயாராக உள்ளது. இதற்காக குஜராத் பேரிடர் மேலாண் அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக மீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறினார்.
20 ஆண்டுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம்: தற்போது ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த பகுதி நிலநடுக்கம் அபாயம் அதிகரித்து வருவதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
நிவாரண தொகை அறிவிப்பு: சிக்கிம் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ஒருலட்ச ரூபாய் வழங்கப்படும என அறிவித்துள்ளார்.