ADDED : செப் 21, 2011 11:17 PM

கோல்கட்டா: ''நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். அதே சமயம், கொள்கைகள் மற்றும் ஆயுதங்களை விட வேண்டிய அவசியமில்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா நகரில் நடந்த வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது: எந்த காலத்திலும் இல்லாத வகையில், தற்போது இந்தியாவுக்கு பன்மடங்கு பாதுகாப்புச் சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல், மத்தியப் பகுதி மாநிலங்களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்கள் பிரச்னை, வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத குழுக்கள் மட்டுமல்லாமல், அவ்வப்போது பயங்கரவாத மிரட்டல் விடும் அமைப்புகள் என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை கையாள வேண்டும் எனில், இந்தியாவுக்கு கூடுதல் வலிமை அவசியமாகிறது. அதற்கேற்ப, நாடு முழுவதும் முழு விழிப்புடன் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஐ.பி., - சி.பி.ஐ.,- என்.ஐ.ஏ., மற்றும் 'ரா' போன்ற நிறுவனங்கள் உதவியுடன் உளவுப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவது அவசியம். நாட்டில், இடதுசாரி பயங்கரவாதம் முதன்மை பிரச்னையாக உள்ளது. இதனால், பெருமளவு மக்கள் உயிரிழந்துள்ளனர். நக்சலைட்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். ஆயுதங்கள், கொள்கைகளை கைவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளில் வன்முறையை விட, பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். தற்போதைய சூழலில், எல்லா நாடுகளிலும் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாத முகாம்களான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அருகில் உள்ளதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. நட்புறவு நாடுகளை மாற்றிக் கொள்ளலாம். அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இது புவியியல் சார்ந்த பிரச்னை என்பதால், அண்டை நாடுகளுடன் நட்புறவாகச் செல்லவே இந்தியா விரும்புகிறது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.