மறைந்து வரும் "லாடம்' கட்டும் தொழில்
மறைந்து வரும் "லாடம்' கட்டும் தொழில்
மறைந்து வரும் "லாடம்' கட்டும் தொழில்

தமிழர்களின் விவசாய வாழ்க்கைப் பிண்ணனியில் மாடுகள் தவிர்க்க இயலாத அங்கமாக இருந்து வருகின்றன.
விவசாயத்திற்கும் மாடுகளுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது. மாடுகளில் உழவு மாடு, வண்டி மாடு என்று இரண்டு வகை உண்டு. வயலை உழுவதற்கும், அங்கு விளைந்த தானியங்களை விற்பனை மண்டிக்கோ, வீட்டிற்கோ கொண்டு சேர்ப்பதற்கு விவசாயிகளின் நண்பனாக இவ்வகை மாடுகள் பயன்பட்டு வந்தன. இவ்வாறு பாரம் ஏற்றி வரும் மாடுகளின் கால்களுக்கு 'லாடம்' அடிப்பது வழக்கம். மனிதர்களுக்கு செருப்பு, ஷூ எத்தனை அவசியமோ, பாதுகாப்பானதோ அதைப்போல மாடுகள், குதிரை போன்ற விலங்குகளுக்கு காலணியாகச் செயல்படுவது இந்த லாடம். இன்றைய உலகில் பல மாற்றங்கள் வந்து விட்டாலும், பல ஆண்டு காலமாக ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது இந்த லாடம் அடிக்கும் முறை. மாடுகளுக்கு லாடம் கட்டுவது என்பது சுவாரஸ்யமான ஒரு செயல். பிடிகயிறை விட சற்று பெரிய கயிறை, மாட்டின் தாடைக்கு கீழ் கொடுத்து, கயிற்றின் அடுத்த நுனியை மாட்டின் வலப்பக்கமாகக் கொண்டு வந்து, தம்பிடித்து இரு நுனியையும் ஒரு இழு இழுத்தால் மாடு பக்கவாட்டில் சரிந்து படுக்கும். மாட்டின் உரிமையாளர் மாட்டின் கொம்பை பிடித்துக் கொள்ளவேண்டும். முன்னங்கால்களை முதலிலேயும், அடுத்து பின்னங்கால்களையும், அடுத்து நான்கு கால்களையும் மொத்தமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். மாட்டின் நான்கு கால்களின் குளம்புகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது, அதன் குளம்புகள் மண் நீக்கப்பட்டு, செதுக்கப்பட்டு சரிசமமாக்கப்படுகிறது. நாட்டு வகை மாடுகள் என்றால், ஒருவகை லாடமும் மற்ற ஜாதி மாடுகளுக்கு ஒருவகை லாடமும் பயன்படுத்தப்படுகிறது.
மாட்டின் கால்களில் லாடம் அடித்தல் என்பது மிக நுட்பமாக செய்யப்படவேண்டிய வேலை ஆகும். சிறிது பிசகினாலும் மாட்டின் கால்களை பதம் பார்க்க வாய்ப்புண்டு. மெல்லிய இரும்பு தகடுகளை, மாட்டின் கால்களின் அகல நீளத்திற்கு ஏற்ப வெட்டி, அதில் சிறிய துளைகளை இட்டு மாட்டின் கால்களோடு சேர்த்து அடிக்கவேண்டும். இப்படி லாடம் கட்டப்படும் மாடுகளை, அன்று பயன்படுத்த முடியாது. ஏனென்றால் வலியின் காரணமாக மிக மெதுவாக நடக்கும். கிராமப் புறங்களில் இதற்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து லாடம் அடிக்கும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால், இப்போதோ அந்த இடங்கள் காத்தாடிக் கிடக்கின்றன. கிராமங்களிலே இந்த நிலைமை என்றால் நகர்புறங்களில் சொல்லத் தேவையில்லை. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மட்டும் காணக் கூடிய இக்காட்சியை சமீபத்தில் சென்னை கே.கே. நகரில் பார்த்த போது, கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்க்க வைத்தது. லாடம் அடித்துக் கொண்டிருந்த தங்கத்திடம் (பெயர்தான்) பேசியபோது, ''இப்பலாம் மாடுக குறைந்து விட்டன. எல்லாத்தையும் அடிமாடாக்கி கேரளாவுக்கு விற்று விடுகிறார்கள். மண் ரோடா இருந்தா, மாடுகளுக்கு லாடம் தேவையில்ல. தார் ரோடா இருக்கிறதால, 20 நாளைக்கு ஒரு தடவை லாடம் அடிக்கணும். இல்லனா மாடு வீணாப்போயிடும். எங்க அப்பாரு காலத்தில், இரவு முழுக்க லாடம் ரெடி பண்ணிட்டு மறுநாள் அஞ்சு ஜோடி மாடுகளுக்காவது, லாடம் அடிச்சிருவோம். இப்போ வாரத்துக்கு ரெண்டு ஜோடி அடிக்கிறதே கஷ்டம்தான். பரம்பரை பரம்பரையா செஞ்சிட்டு வர்ற இந்த தொழிலை, என் மகன் செய்ய மாட்டேனு சொல்லிட்டு, மெக்கானிக் வேலைக்கு போறான். இன்னொரு தலைமுறைக்கு இந்த தொழில் இருக்குமானே தெரியல,'' என்றார். அவரது குரலில் வலி தெறித்தது. உண்மைதான்; இன்றைய தலைமுறையிடம் போய், 'லாடம் தெரியுமா?' என்று கேட்டால், 'புதுவகை சைனீஷ் டிஷ்ஷா' என்று கேட்கும் அளவுக்குத்தானே நிலைமை இருக்கிறது.
- டேனியல் வி. ராஜா -