Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கிராமங்களில் களை கட்டியது தேர்தல் திருவிழா :சுவர் விளம்பரங்களால் பெரும் பரபரப்பு

கிராமங்களில் களை கட்டியது தேர்தல் திருவிழா :சுவர் விளம்பரங்களால் பெரும் பரபரப்பு

கிராமங்களில் களை கட்டியது தேர்தல் திருவிழா :சுவர் விளம்பரங்களால் பெரும் பரபரப்பு

கிராமங்களில் களை கட்டியது தேர்தல் திருவிழா :சுவர் விளம்பரங்களால் பெரும் பரபரப்பு

ADDED : செப் 28, 2011 11:34 PM


Google News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ளாட்சி தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது.

முதல் கட்டமாக சுவர் விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், எப்போதும் இல்லாத நிலையில் இந்த முறை தர்மபுரி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டி அதிகரித்துள்ளது. நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் சுவர் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம பகுதி வேட்பாளர்கள் சுவர் விளம்பரங்கள் செய்ய தடையில்லை. இதனால், கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடுவோர் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் சுவர் விளம்பரங்களை செய்ய முன் பதிவு செய்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக கிராமங்களில் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பவர்கள் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர். மாவட்டத்தில் அதிக வருவாய் உள்ள இலக்கியம்பட்டி, இண்டூர் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதோடு, சுவர் விளம்பரங்களும் முதல் கட்டமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை (செப்.,30) நடக்கிறது. அன்று அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது, சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே கிராம பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் களை கட்ட துவங்கி விட்டது. சின்னங்களுக்கு இடம் ஒதுக்கி விட்டு விளம்பரங்கள் சுவர்களில் எழுதப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் முன்னாள், இன்னாள் பிரதிநிதிகள் போட்டியிடும் பகுதியில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. பொறுப்புகளில் இருந்த போது செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். அதே போல் முதல் கட்டமாக அந்தந்த பகுதியில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் ஊர் கவுண்டர்கள் ஆகியவர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி பேசி வருகின்றனர். பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. பல கிராமங்களில் கிராமத்துக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்து வேட்பாளர்கள் ஆதரவுகளை திரட்டி வருகின்றனர். வேட்பாளர்களை தேடி வரும் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்களை கவனிப்பும் நடந்து வருகிறது. வரும் 3ம் தேதிக்கு பின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை பஞ்சாயத்து பகுதியில் போட்டி அதிகரித்து இருப்பதால், மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் ஓட்டு போட பணம் மற்றும் பல்வேறு அன்பளிப்பு பொருட்களும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, கிராம பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us