மோடியை ஸ்டாலின் சந்தித்தால் பழனிசாமி பதறுவது ஏன்: திருமாவளவன்
மோடியை ஸ்டாலின் சந்தித்தால் பழனிசாமி பதறுவது ஏன்: திருமாவளவன்
மோடியை ஸ்டாலின் சந்தித்தால் பழனிசாமி பதறுவது ஏன்: திருமாவளவன்

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நிடி ஆயோக்' கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது, ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் உள்ள நிதிகளை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்துவது முதல்வரின் கடமை; பொறுப்பு.
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு, கவர்னர் மூலம் நெருக்கடி தருவதை தாண்டி, மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தராமல், திட்டமிட்டு தேக்கத்தை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், கல்விக்காக அளிக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கின்றனர். இது, மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கு. இந்நிலையில், நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, நிடி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வர் சென்றார்.
இதன் வாயிலாக, பா.ஜ.,வுடன் தி.மு.க., இணக்கமான சூழலை உருவாக்கி, நெருங்கி விடுமோ என்ற பதற்றம் அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான், முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றதை ஏற்க முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து விமர்சிக்கிறார்.
கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பி, அதில் திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது, தமிழர் தொன்மையில் புரிதல் இல்லாததையும், காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது.
அனைத்து ஆபாச தளங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற சூழல் உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு வரவேற்புக்குரியது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.