/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
சேலம்: ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் நகரில் மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம், பக்தர்களின் உருளுதண்டம் நிகழ்ச்சி நடந்தது.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு அலங்கார ஆராதனை நடந்தது. காலை முதல் மாலை வரை நூற்றுக்கணக்கானோர், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள், காலை முதல் இரவு 10 மணி வரை உருளுதண்டம் நிகழ்த்தினர். மாலை 6 மணிக்கு, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.
சேலம், சஞ்சீவிராயன் பேட்டை சீரங்கன் தெருவில் அமைந்துள்ள, காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இரவு புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 9 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், சத்தாபரண சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
சேலம், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில், நாட்டார் சாவடி அபிஷேக ஆராதனைக்கு பின், அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு சேலம் மாவட்ட நார்பட்டு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், சிறப்பு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று காலை 10 மணிக்கு கோவில் கட்டளை சார்பில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை 5.30 மணி முதல் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடக்கிறது. பராசக்தி வண்டி வேடிக்கை விழாக்குழு இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. சிறந்த அலங்கார வண்டிகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6.30 மணிக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, சொர்ணாம்பிகை அம்மனுக்கு, 18 ஆயிரம் வளையல்கள் சாத்தப்பட்டு, பூஜை நடக்கிறது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.