மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் : மம்முட்டியிடம் விடிய விடிய விசாரணை
மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் : மம்முட்டியிடம் விடிய விடிய விசாரணை
மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் : மம்முட்டியிடம் விடிய விடிய விசாரணை

கொச்சி : வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டில், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகளில் இருந்து பல ஆவணங்களும், கலைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்களுக்கு சொந்தமாக சென்னை, கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் காலை, அவர்களது வீடுகளில் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் மம்முட்டியின் வீட்டுக்கு, வருமான வரித் துறை விசாரணைப் பிரிவு இயக்குனர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவும், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டுக்கு ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று பேர் கொண்ட குழுவும் சென்று சோதனை நடத்தியது.
இது மட்டுமின்றி, இவ்விரு நடிகர்களுக்குச் சொந்தமாக பல்வேறு நகரங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், படப்பிடிப்பு நிலையம், நிறுவனங்கள், அவர்களது நெருங்கிய திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இதில், நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்து இரு யானைத் தந்தங்கள் சிக்கின.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவைகள் அசலா, போலியா என, விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது வீட்டில் இரு ரகசிய அறைகள் இருப்பதும், அவைகள் மோகன்லால் அல்லது அவரது மனைவி சுசித்ரா ஆகியோரது விரல் ரேகைகள் பதித்தால் மட்டுமே திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அவற்றை திறக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், மோகன்லால் தமிழகத்தில் ராமேஸ்வரம் தீவு பகுதியில், மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு வரும், 'பிரணவம்' ஷூட்டிங்கில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மதுரையில் இருந்து வருமான வரித் துறையினர் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து கொச்சி வந்த நடிகர் மம்முட்டியிடம், அவரது பனம்பிள்ளி நகர் வீட்டில், இரவு முதல் அதிகாலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
'விசாரணைக்கு மம்முட்டி முழு ஒத்துழைப்பு கொடுத்தார்' என, விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறினர். ஏழு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.
மோகன்லால் மற்றும் மம்முட்டியின் வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் இருந்து சிக்கிய ஆவணங்களுக்கும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், வருவாய்க்கும், செலவு செய்த கணக்கு விவரங்களுக்கும் வேறுபாடுகள் காணப்பட்டன. இதையடுத்து, அவர்களிடம் நாளை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன்லால் ஆவேசம்: வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனை தொடர்பாக, ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் நடிகர் மோகன்லால் கூறுகையில், 'வருமான வரித்துறையினர் அவர்களது பணியை செய்துள்ளனர். நான் தவறேதும் செய்யவில்லை. அவ்வாறு தவறு செய்திருந்தால் அரசு வழங்கும் எந்த தண்டனையையும் ஏற்க தயார்' என்றார்.