ADDED : செப் 11, 2011 11:39 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, நேற்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனை, போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலை, தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜான்பாண்டியன், பின், ஆதரவாளர்களுடன் காரில், நெல்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 10.45 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு போலீஸ் துப்பாக்கி சுடுதளம் அருகே, அவரது காரை வழிமறித்த, நெல்லை டி.ஐ.ஜி.,(பொறுப்பு) வரதராஜுலு, தூத்துக்குடி எஸ்.பி.,நரேந்திரன் நாயர், அதிகாரிகள், ஜான்பாண்டியன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள, ஜான்பாண்டியன் திட்டமிட்டு இருந்ததாலும், அங்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் பரமக்குடி சென்றால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடுமென்பதாலும், முன்னெச்சரிக்கையாக, அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.