Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'சார்ஜிங்' வசதியை அரசு செய்து தந்தால் 300 மின்சார பஸ்கள் வாங்க தயார்

'சார்ஜிங்' வசதியை அரசு செய்து தந்தால் 300 மின்சார பஸ்கள் வாங்க தயார்

'சார்ஜிங்' வசதியை அரசு செய்து தந்தால் 300 மின்சார பஸ்கள் வாங்க தயார்

'சார்ஜிங்' வசதியை அரசு செய்து தந்தால் 300 மின்சார பஸ்கள் வாங்க தயார்

ADDED : ஜூன் 01, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக 300 மின்சார சொகுசு பஸ்களை வாங்கவும், 'சார்ஜிங்' போன்ற கட்டமைப்பு பணிக்கு முதலீடு செய்யவும் தயாராக உள்ளோம். ஆனால், மின் வினியோக கட்டமைப்புகளை அரசும், மின் வாரியமும் தான் செய்துதர வேண்டும்' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, 'பேட்டரி' வாகனங்களை அதிகரிக்க, மத்திய- - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. வரிச்சலுகை அளிப்பதால், மின்சார பேட்டரி வாகனங்களை வாங்க, பொதுமக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

வரி விலக்கு


தமிழகத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக்கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் காரணமாக, தமிழகத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில், 70 சதவீதம் இருசக்கர வாகனங்கள், 20 சதவீதம் கார்கள்.

ஆனால், மின்சார பஸ்கள் பெரிய அளவில் வாங்கப்படவில்லை. தனியார் பஸ் உரிமையாளர்கள், மின்சார பஸ்கள் வாங்க தயாராக இருக்கின்றனர். ஆனால், சார்ஜிங் வசதி போன்ற கட்டமைப்புகள் இல்லாததால் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது:

எரிபொருள் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்டகால செலவு குறைவு என்பதால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதி இருக்கிறது.

தனியார் பங்களிப்போடு, மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் சில மின்சார பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சார்ஜிங் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது.

செலவு குறையும்


தமிழகத்தில், 300 அதிநவீன மின்சார சொகுசு பஸ்களை வாங்கி இயக்க தயாராக உள்ளோம். பேட்டரி தொழில்நுட்பத்தால், 50 சதவீதம் எரிபொருள் செலவு குறையும். மேலும், வரி விலக்கு சலுகையால், ஆண்டுக்கு ஒரு பஸ்சுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.

ஒருமுறை சார்ஜிங் செய்தால், 300 கி.மீ., வரை செல்ல முடியும்.

சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் புதிதாக வர உள்ள குத்தம்பாக்கம் பஸ் நிலையங்கள்; கோவை, திருச்சி, மதுரை, சேலம், விருதுநகர், கரூர், கடலுார், கிருஷ்ணகிரி பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலை பகுதிகள் என, 18 இடங்களை தேர்வு செய்து, அங்கு சார்ஜிங் உள்ளிட்ட மின்சார வாகனங்களுக்கான அனைத்து கட்டமைப்புகளை ஏற்படுத்த முதலீடு செய்யவும் தயாராக உள்ளோம்.

ஆனால், இவற்றில், 24 மணி நேரமும் மின் இணைப்பு தருவதற்கான வசதியை தமிழக அரசும், மின்சார வாரியமும் தான் செய்துதர வேண்டும். அதை செய்து தருமாறு ஒரு மாதமாக கேட்டு வருகிறோம்.

இது போன்ற திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழக அரசுக்கு தான் ஆர்வம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us