ADDED : செப் 17, 2011 03:11 AM
மேலூர் : இலவச ஆடுகள் வாங்கிய பயனாளிகளிடம் இருந்து ஆடுகளை விலைக்கு வாங்கி அடுத்த பயனாளிகளுக்கு கொடுக்கும் நிலை வர வேண்டும் என ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் Œகாயம் பேசினார்.தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் மதுரை மாவட்டத்தில் மேலூரில் அரசப்பன்பட்டி, டி.கல்லுபட்டியில் சிட்டுலொட்டி, செல்லம்பட்டியில் அய்யனார்குளத்தில் நேற்று துவக்கப்பட்டது.
அரசப்பன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது : மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு 71 ஊராட்சிகளில் 3406 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட உள்ளது. முதற் கட்டமாக தேர்வு பெற்ற மூன்று இடங்களில் ஆடுகள், கொட்டகை, தீவனம் மற்றும் காப்பீட்டு தொகை உட்பட 9 லட்சத்து 46 ஆயிரத்து 200 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் அரசப்பன்பட்டியில் 31 பேரும், சிட்டுலொட்டியில் 35 பேரும், அய்யனார்குளத்தில் 10 பேரும் பயனாளிகளாக தேர்வு பெற்று பயனடைந்துள்ளனர். ஆடுகளை பெற்ற பயனாளிகள் உடனடியாக ஆடுகளை விற்று விடாமல், பல்கி பெருக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் இத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் ஆடுகள் பயனாளிகளிடமிருந்து வாங்கப்பட வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ராஜூ கலந்து கொண்டு ஆடுகளை வழங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் சாமி, தமிழரசன், முத்துராமலிங்கம், கருப்பையா, ஊராட்சி தலைவர் வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி இயக்குநர் அன்பழகன் நன்றி கூறினார்.