தேர்தலை விட மழையை எதிர்பார்க்கும் மக்கள்
தேர்தலை விட மழையை எதிர்பார்க்கும் மக்கள்
தேர்தலை விட மழையை எதிர்பார்க்கும் மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இவ்வருடம் போதிய மழை இல்லாததால், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தேர்தலை விட ஆர்வமாக மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். பாலாறு, வேகவதியாறு, செய்யாறு, ஓங்கூர் ஆறு, ஆகியவை மாவட்டத்தின் வழியே சென்றாலும், அவற்றில் தண்ணீரை பார்ப்பது அரிதாக உள்ளது. காஞ்சிபுரம் பாலாற்றில் தண்ணீரை பார்த்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள், ஏரிப்பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர்.
மாவட்டத்தில் 18 பெரிய ஏரிகள் உட்பட 1,942 ஏரிகள் உள்ளன. இவை பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில்,தாமல் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, பி.வி.களத்தூர் ஏரி, கொளவாய் ஏரி, பாலூர் ஏரி, கொண்டங்கி ஏரி, காயார் ஏரி, மானாமதி ஏரி, சிறுதாவூர் ஏரி, தையூர் ஏரி, மணிமங்கலம் ஏரி, பல்லவன்குளம் ஏரி, மதுராந்தகம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, ஆகியவை முக்கியமான ஏரிகளாகும். இந்த ஏரிகள் நிரம்பினால், ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில், மூன்று போகம் விளையும்.
மழை பெய்தால் மட்டுமே ஏரிகள் நிரம்பும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயத்திற்கு, மழை அவசியமாகிறது. ஆனால், சமீப காலமாக மழையின் அளவு குறைந்தபடி உள்ளது. ஏரிகள் நிரம்பி வழிவதும் அரிதாகி வருகிறது. கிணறு அமைத்து விவசாயம் செய்யலாம், என நினைத்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்வதால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வருடம் கடந்த மாதம் வரை போதிய மழை இல்லை. ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. பெரும்பாலான ஏரிகள் கிரிக்கெட் மைதானங்களாக காட்சி அளிக்கின்றன. விடுமுறை நாட்களில், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் ஏரிகளில் குவிந்து விடுகின்றன. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரிகளை பார்க்கும்போது, கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.
ஏரிகளில் தண்ணீர் இல்லாததால், ஆக்கிரமிப்புகள் அதிகரித்தபடி உள்ளன. பல ஏரிகள் பராமரிப்பின்றி தூர்ந்துள்ளன. சிறு மழை பெய்தாலே நிரம்பக்கூடிய நிலையில், பல ஏரிகள் உள்ளன. ஆனால், அவை நிரம்பும் அளவிற்கு கூட மழை பெய்யாதது, விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 209.59 மி.மீ., மழை பதிவானது. ஆனால், இந்த வருடம் 162.24 மி.மீ., மழை மட்டுமே பதிவானது. செப்டம்பரில் சற்று கூடுதல் மழை பெய்துள்ளது. எனினும், நவம்பர், டிசம்பர் மாதங்களில், அதிக மழை பெய்தால் மட்டுமே, ஏரிகள் நிரம்பும் சூழல் உள்ளது. ஏரிகள் நிரம்பினால் மட்டுமே, அடுத்த வருடம் மழைக்காலம் வரும் வரை, விவசாயம் செய்ய முடியும். மழை இல்லாவிட்டால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் தேர்தல் முடிவை விட ஆவலுடன், மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு அபாயம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தற்போதே, காஞ்சிபுரம் நகரில் மக்களுக்கு வழங்கப்படும், குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மழை இல்லாவிட்டால், பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.


