Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/உட்கட்சி பூசலை ஓரம் கட்டிய அரசியல் கட்சிகள்

உட்கட்சி பூசலை ஓரம் கட்டிய அரசியல் கட்சிகள்

உட்கட்சி பூசலை ஓரம் கட்டிய அரசியல் கட்சிகள்

உட்கட்சி பூசலை ஓரம் கட்டிய அரசியல் கட்சிகள்

ADDED : அக் 08, 2011 12:32 AM


Google News

ஊட்டி : ஊட்டி நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க நாளுக்கு நாள் கடும் போட்டி நிலவி வருவதால், அரசியல் கட்சியினர் 'கோஷ்டி பூசலை ஓரம் கட்டிவிட்டு' ஒன்றாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள ஊட்டியின் நகர மன்ற தலைவர் பதவி என்பது வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றது.

உலக சுற்றுலா வரைபடத்தில் உள்ள ஊட்டிக்கு வரும் அனைத்து முக்கிய பிரமுகர்களையும் உடனடியாக சந்திக்க ஊட்டி நகர மன்ற தலைவருக்கு உரிமை உள்ளது. இதனால், இந்த பதவி மிகவும் 'கவுரவமான' பதவியாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து கருதப்படுகிறது. இத்தகைய பதவியை பிடிக்க ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் கடும் போட்டியிடுவது வழக்கம். அதில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அதிக முறை நகர மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.இம்முறை தி.மு.க.,- காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக களம் இறங்கி உள்ளதாலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்கட்சியான தே.மு.தி.க., உட்பட பிற கட்சிகளும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ள காரணத்தினாலும் பிரசார களம் இதுவரை இல்லாத அளவுக்கு 'சூடு' பிடித்துள்ளது. பிரசாரம் செய்ய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களின் 'கோஷ்டி பூசலை' மறந்து ஒருங்கிணைந்து ஒவ்வொரு வார்டுகளுக்கும் 'படைகளுடன்' சென்று ஓட்டுக்களை சேகரித்து வருகின்றனர்.இதில், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் எம்.பி.,பிரபு அணி; மத்திய அமைச்சர் வாசன் அணி என்ற இரு அணியினரும் ஒன்றாக சேர்ந்து, தங்களின் வேட்பாளர் லலிதா தனபாலுக்கும், காங்., கவுன்சிலருக்கும் வெற்றி கிடைக்க அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.,வில் முன்னாள் கொறடா முபாரக் அணி; குன்னூர் எம்.எல்.ஏ.,ராமசந்திரன் அணியினர் வேற்றுமைகளை மறந்து, ஒன்றாக சென்று தலைவர் வேட்பாளர் கீதாவுக்கும், கவுன்சிலர் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைத்து வருகின்றனர்.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, முன்னாள் மாவட்ட செயலா ளர் செல்வராஜ் ஓரம் கட்டப்பட்டதால், பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் அணிக்கு வந்துவிட்டனர். இதனால், ஒரு சிலரை தவிர, ஆளும் கட்சியினர் தலைவர் வேட்பாளர் சத்தியபாமா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றாக சென்று பிரசாரம் செய்கின்றனர். தே.மு.தி.க.,வில், சட்டŒபை தேர்தலின் போது, பல்வேறு பிரச்னைகளால் பிரசாரத்துக்கு போகாதவர்கள் கூட, ஊட்டி நகர மன்றத்தில் இடம் பிடிக்க களத்தில் உள்ளனர்.இதனால், அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள உண்மையான தொண்டர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஒற்றுமை வரும் 21ம் தேதிக்கு பின்பும் தொடருமா என்பதை, ஊட்டி நகர மன்றத்தின் பதவியேற்பு விழாவுக்கு பின்புதான் பார்க்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us