Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: பல லட்சம் வாழைகள் மூழ்கும் அபாயம்

பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: பல லட்சம் வாழைகள் மூழ்கும் அபாயம்

பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: பல லட்சம் வாழைகள் மூழ்கும் அபாயம்

பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: பல லட்சம் வாழைகள் மூழ்கும் அபாயம்

ADDED : ஆக 12, 2011 11:31 PM


Google News
சிறுமுகை : பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகளவில் வருவதால், நீர் தேக்கப்பகுதியில் பயிர் செய்துள்ள பல லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

பவானி சாகர் அணையின் நீர்மட்ட உயரம் 120 அடியாகும்; நீலகிரி மலைப்பகுதிகள் இதன் பிரதான நீர்பிடிப்பு பகுதிகளாகும். அணையில் 70 அடிக்கு தண்ணீர் குறைவாக இருக்கும்போது, நீர்தேக்கப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் காலியாக இருக்கும். இந்த இடத்தை பொதுப்பணித்துறையிடம் சில நிபந்தனைகள் பேரில், விவசாயிகள் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பயிர் செய்யும் பயிர்களுக்கு, பவானி ஆற்றில் இருந்து ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பாசனம் செய்கின்றனர். அணைப்பகுதியில் பவானி ஆற்றின் இரண்டு பக்கமும் உள்ள காலியிடத்தில், விவசாயிகள் பணப்பயிரான வாழையை பயிர் செய்து வருகின்றனர். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் 10 மாதத்தில் வாழையை அறுவடை செய்து விடுவர். நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தால், பல லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கிவிடும். தற்போது அணையில் நீர்மட்டம் 99.45 அடிக்கு உயர்ந்துள்ளதால், நீர்த்தேக்கப்பகுதியில் பயிர் செய்துள்ள பல லட்சம் வாழைகள் மூழ்கி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் லிங்காபுரம் சின்னு, காந்தவயல் பத்திரன் ஆகியோர் கூறியதாவது: பவானி சாகர் அணை நிரம்பினால் 40 கி.மீ., தொலைவில் உள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு வரை பவானி ஆற்றில் தண்ணீர் தேங்கியிருக்கும். அணையில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்தால், ஆற்றின் இரண்டு பக்கமுள்ள குமரன் சாலை, இச்சிப்பாலி, தட்டப்பள்ளம், பெரிய ஒரம்பு, சின்ன ஒரம்பு, குண்டுக்கல்மடுவு, மொக்கைமேடு, காந்தவயல், லிங்காபுரம், கூத்தாமண்டி, மூளையூர்,வரப்பள்ளம், மயில் மொக் கை, ஜெ.ஜெ.நகர், வால்கரடு உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிர் செய்வது வழக்கம். இந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு குறைவாக இருந்தது. அதனால், விவசாயிகள் நீர் தேக்கப்பகுதியில் பல லட்சக்கணக்கான வாழைகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால், கடந்த ஒரு வாரமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. தற்போது அணையில் 99 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்ததால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகள் தண்ணீரில் மூழ்கின. நீர்வரத்து அதிகளவில் வருவதால், மேலும் பல லட்சக்கணக்கான வாழைகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கருணை அடிப் படையில் நஷ்டயீடு வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us