நடுக்கடலில் புதிய அச்சுறுத்தல் பீதியில் தமிழக மீனவர்கள்
நடுக்கடலில் புதிய அச்சுறுத்தல் பீதியில் தமிழக மீனவர்கள்
நடுக்கடலில் புதிய அச்சுறுத்தல் பீதியில் தமிழக மீனவர்கள்
ADDED : ஆக 24, 2011 12:23 AM
நாகப்பட்டினம் : தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் ஏற்பட்டுள்ள மர்மக் கொள்ளையர்களின் அச்சுறுத்தலால், மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது என்று தொல்லை தந்து வந்தது தற்போது ஓய்ந்துள்ளது. அந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்குள், இன்னொரு பிரச்னை, மீனவர்கள் தலையில் இடியாக இறங்கியுள்ளது. தற்போது, மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் படகுகளை, இலங்கைத் தமிழர்கள் போல் தோற்றம் கொண்ட கொள்ளையர்கள், அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகுகளுடன், கூட்டமாக நடுக்கடலில் வழி மறிக்கின்றனர். மீனவர்களிடம் உள்ள மீன்கள், வலைகள், மொபைல் போன் போன்றவற்றை, மிரட்டி பறித்துச் செல்வதுடன், அரிவாள் வெட்டு, கத்தி குத்து என, கடும் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நாகை மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த பின் தான், தாக்குதல் சம்பவம் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது. இலங்கை கடற்படையினரும் இல்லாமல், சிங்கள, தமிழக மீனவர்களும் இல்லாமல், தமிழ் பேசும் புதிய கொள்ளையர்கள், இலங்கை பகுதிகளில் இருந்து வருவதாக, தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழக மீனவர்கள் கூறுகையில், 'இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மோதலை ஏற்படுத்தவே, இது போன்ற சூழ்ச்சி நடவடிக்கையை இலங்கை அரசியல்வாதிகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழக மீனவர்களை மர்மக் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற, இந்திய கடற்படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடுக்கடலில் இந்திய கடற்படையினர் தொடர் ரோந்து மேற்கொண்டால் தான், தமிழக மீனவர்களை, இலங்கையில் இருந்து வரும் புதிய கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும்' என்றனர்.