மூன்று நாள் உண்ணாவிரதம் துவக்கினார் மோடி
மூன்று நாள் உண்ணாவிரதம் துவக்கினார் மோடி
மூன்று நாள் உண்ணாவிரதம் துவக்கினார் மோடி

'குஜராத்தில் நடந்த குல்பர்கா சொசைட்டி கலவரம் தொடர்பான வழக்கை, இனியும் கண்காணிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தை, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட் கையாளும்' என, சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. இது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய நிம்மதியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, குஜராத்தின், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில், மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, நரேந்திர மோடி அறிவித்தார். தன் பிறந்த நாளன்று (செப்., 17) உண்ணாவிரதத்தை துவக்கவும் அவர் திட்டமிட்டார்.இதன்படி, 'சத்பாவனா மிஷன்' என்ற பெயரில், நேற்று திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை துவக்கினார். இதற்காக, ஆமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக் கழக கண்காட்சி அரங்கில், பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நேற்று காலை, தன் தாயாரின் காலைத் தொட்டு ஆசி வாங்கியபின், உண்ணாவிரத மேடைக்கு, மோடி வந்தார்.
இதன்பின், நரேந்திர மோடி பேசியதாவது: இந்த உண்ணாவிரதம், யாருக்கும் எதிரானது அல்ல. மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக, நாம் இங்கு கூடியிருக்கிறோம். வளர்ச்சியை ஏற்படுத்துவதும், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதும் தான், என் நோக்கம். சகோதரத்துவம், மத நல்லிணக்கம், அமைதியுடன் கூடிய வளர்ச்சியை எட்டுவதில், உலக நாடுகளுக்கு, நாம் சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறோம்.தற்போதைய சூழ்நிலையில், இந்த உண்ணாவிரதம் மிகவும் அவசியமானது. அமைதி, நல்லிணக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த உண்ணாவிரதம் துவக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக, பல்வேறு அவமதிப்புக்கு குஜராத் மாநிலம் ஆளாகியது. இதன் வலி உங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, நானே அவற்றை எதிர்கொண்டேன். குஜராத்தில் மனித நேயம் எந்த வகையிலும் குறையவில்லை என்பதை, உறுதி செய்ய விரும்புகிறேன்.
இதற்காக, கடவுளிடம் இருந்து சக்தியை கேட்கிறேன். என் வாழ் நாள் முழுவதையும் குஜராத் மக்களுக்காக தியாகம் செய்ய விரும்புகிறேன். யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடனோ, யாருடனும் கசப்புணர்வுடனோ நடந்து கொள்ள மாட்டேன்.குஜராத்தில் ஏற்பட்டுள்ள தொழில், விவசாய, சுகாதார, கல்வி வளர்ச்சியை, உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன. அனைத்து விதமான தடைகளையும் தாண்டி, தற்போது வெற்றிகரமான மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.கடந்த, 2001ல் ஏற்பட்ட நில நடுக்க பாதிப்பை சீரமைக்க, ஏழு ஆண்டுகளாகும் என, உலக வங்கி கூறியது. ஆனால், அனைவரும் அதிசயக்க தக்க வகையில், மூன்று ஆண்டுகளிலேயே, சீரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2002ல் குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. இதனால், குஜராத் மாநிலம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வதாக விமர்சனம் எழுந்தது. ஆனாலும், இந்த பிரச்னையையும் சமாளித்து, மாநிலத்தை பலப்படுத்தினோம். இப்பிரச்னையின்போது, நாகரிக உலகில், இதுபோன்ற கலவரம் ஏற்படக் கூடாது என, கூறினேன். அந்த நேரத்தில் என் மனதில் மிகப் பெரிய வலி ஏற்பட்டதை உணர்ந்தேன். இப்போதும் அந்த வலியை என்னால் உணர முடிகிறது.
எங்கள் மீது, பிறர் வீசிய கற்களைக் கொண்டே, எங்களுக்கான வெற்றிப் படிக் கட்டுகளை அமைத்துக் கொண்டோம். சுதந்திரம் அடைந்ததற்கு பின், கடந்த, 60 ஆண்டுகளாக மதச் சார்பு என்ற பெயரில், ஓட்டு வங்கி அரசியல் நடக்கிறது. இதுபோன்ற சூழலில், இந்த உண்ணாவிரதம், ஓட்டு வங்கி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
'குஜராத் அரசின் திட்டங்களை பின்பற்ற வேண்டும்': நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:குஜராத்தில் சிறப்பான நிர்வாகம் நடக்கிறது. ஊழல், பயங்கரவாதம் ஆகிய விஷயங்களுக்கு எதிராக, குஜராத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, குஜராத் மாநிலம், பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. சிறப்பான நிர்வாகத்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளாலும், குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, 11 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது. வேறு எந்த மாநிலமும் இந்த அளவு வளர்ச்சியை அடையவில்லை. முதல்வர் நரேந்திர மோடியால் தான், இது சாத்தியமானது. குஜராத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், சர்வதேச அளவில், இந்தியாவின் தரம், மேலும் பல மடங்கு உயர்ந்து விடும். இவ்வாறு அத்வானி பேசினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது: அடுத்த சில மாதங்களில், நரேந்திர மோடி பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறப் போகின்றன. தன் திறமையான செயல்பாடுகளால், குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடை போட வைத்துள்ளார், மோடி. மற்றொரு பக்கமோ, மத்திய அரசு ஊழல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.