/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதிதாசன் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவுபாரதிதாசன் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
பாரதிதாசன் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
பாரதிதாசன் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
பாரதிதாசன் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : பாரதிதாசன் கல்லூரியில் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்திய அமைச்சர் கல்யாணசுந்தரம், அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் விலங்கியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் பிரெஞ்சு ஆகிய துறைகளில் பயிலும் மாணவிகள் நேற்று காலை திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்லூரியில் பெரும்பாலான துறைகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளது. ஆய்வக உதவியாளர்கள் இல்லாததால், ஆய்வு உபகரணங்களை மாணவிகளே தயார்படுத்த வேண்டி உள்ளது. ஆய்வுக் கூடங்களில் தண்ணீர் வசதியில்லை. கல்லூரி நூலகத்தைப் பயன்படுத்த, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. சில வகுப்பறைகளில் மின் விசிறி வசதியில்லை, கழிவறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப் படுவதில்லை, கேன்டீனில் உணவின் தரம் சரியில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் அடுக்கினர். குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட துறைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். கல்லூரி முதல்வர் சவுந்தரவள்ளி உடனிருந்தார். வகுப்பறைகளுக்குத் தேவையான மின் விசிறிகளை உடனடியாகப் புதிதாக வாங்கிப் பொருத்தவும், கல்லூரியின் அனைத்து துறைகளுக்கும் தண்ணீர் தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இடைத் தேர்தலையொட்டி மாதிரி நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விரிவுரையாளர்கள் பிரச்னைக்குத் தற்காலிக தீர்வாக, பிற அரசுக் கல்லூரிகளில் உபரியாக உள்ள விரிவுரையாளர்களை இக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யவும், தேர்தல் முடிந்த பிறகு தேவையான நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதுபற்றி கல்வித் துறை இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினார். அமைச்சர் உறுதி அளித்ததை ஏற்று, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அமைச்சர் உத்தரவின்பேரில், கல்லூரியில் வகுப்பறைகளுக்கு புதிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டதுடன், தண்ணீர் வசதியும் உடனடியாக ஏற்படுத்தப்பட்டது.