Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க., அமைச்சர் மீது நில மோசடி புகார்

அ.தி.மு.க., அமைச்சர் மீது நில மோசடி புகார்

அ.தி.மு.க., அமைச்சர் மீது நில மோசடி புகார்

அ.தி.மு.க., அமைச்சர் மீது நில மோசடி புகார்

ADDED : ஜூலை 20, 2011 07:25 PM


Google News
திருவண்ணாமலை: 'அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மோசடி செய்து நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.

அந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும்' என, பாதிக்கப்பட்ட, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, போலீசில் புகார் தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி துணைத் தலைவராகவும், அ.தி.மு.க.,வின் மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளவர் மூர்த்தி. இவரது நிலத்தை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மோசடி செய்து பெற்று கொண்டு பணத்தை கொடுக்க மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசாரிடம் அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நானும், வேங்கிக்கால் கோட்டம்பாளையத்தைச் சேர்ந்த பரசுராமன், வேங்கிக்கால் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய மூவரும் சேர்ந்து, வேலூர் - திருவண்ணாமலை சாலையில், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான, 4 ஏக்கர், 60 சென்ட் நிலத்தை, 2008, பிப்., 13ம் தேதி, கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்து கொண்டோம். மேலும், வெங்கடேசன் மகன்களான சதீஷ், முனியப்பன், மகள் ரோகிணி ஆகியோரிடமும், பத்திரப்பதிவின் போது கையெழுத்து பெற்றுள்ளோம். இதனிடையே, குடும்ப கடன் காரணமாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவரிடம், 10 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, அடமான ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்நிலையில், அந்த இடத்தை மீட்டு, பிளாட் போட்டு விற்கலாம் என, மூவரும் முடிவெடுத்து, பாரதிநகர் என்ற பெயரில் வீட்டு மனைகளாக மாற்றினோம். இந்த நிலம், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கல்லூரிக்கு அருகே இருப்பதால், அவர் பெற்று கொள்வதாகக் கூறி, தன் பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறினார். நாங்கள் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை. வேங்கிக்கால் ஊராட்சித் தலைவர் குமாரசாமியை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழைத்து, ''உனக்கு ஒன்றிய செயலர் பதவி வாங்கித் தருகிறேன். அந்த நிலத்தை என் பெயருக்கு எழுதி வாங்கி கொடுக்க வேண்டும்'' என, கூறியுள்ளார். குமாரசாமி, என்னையும் (மூர்த்தி), பரசுராமன் மற்றும் அன்பழகனையும் அழைத்து பேசி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு அந்த நிலத்தை எழுதி தருமாறு வற்புறுத்தினார். பரசுராமன் மற்றும் அன்பழகன் ஆகிய இருவரும் ஒப்பு கொண்டனர். நான் மட்டும் ஒப்பு கொள்ளவில்லை. ஆட்களை விட்டு மிரட்டி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, அவரது அடி ஆட்களை வரவழைத்து, மொத்த நிலத்துக்கும், 1 கோடியே, மூன்று லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் தருவதாக பேசி முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பேசியபடி பணம் தராமல், ராஜேந்திரகுமாரிடம் அடமானம் பெற்றிருந்த, 10 லட்ச ரூபாயை மட்டும், 'செட்டில்' செய்து விட்டு, அவரது கல்லூரிக்கு சார்பதிவாளரை வரவழைத்து, அமைச்சருக்கு சொந்தமான, அவரது மகன் அருள்நேசன் சேர்மனாக உள்ள திருவள்ளுவர் எஜுகேஷனல் டிரஸ்ட் பெயருக்கு, நிலத்தை எழுதி வாங்கி கொண்டார். எனவே, எனக்கு சேர வேண்டிய மூன்றில் ஒரு பங்கு தொகையான, 31 லட்ச ரூபாயை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில் அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, நிருபர்களிடம் கூறியதாவது: புகார் குறித்து விசாரணை நடக்கிறது. வழக்கு பதிவு செய்யவில்லை. உண்மை நிலவரம் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும். நில மோசடி புகார் பிரிவு துவங்கப்பட்டதில் இருந்து, 55 புகார்கள் வந்துள்ளன. இதில், மூன்று வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்துள்ளோம். மூன்று பேருக்கு நிலத்தை மீட்டு கொடுத்துள்ளோம். இவ்வாறு சாமுண்டீஸ்வரி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us