Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பனியன் துணிக்கு 5 சதவீத "வாட்' வரி விதிப்பு :திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி

பனியன் துணிக்கு 5 சதவீத "வாட்' வரி விதிப்பு :திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி

பனியன் துணிக்கு 5 சதவீத "வாட்' வரி விதிப்பு :திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி

பனியன் துணிக்கு 5 சதவீத "வாட்' வரி விதிப்பு :திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி

ADDED : ஜூலை 13, 2011 02:07 AM


Google News
திருப்பூர் : நூல் விற்பனைக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த மதிப்பு கூட்டு (வாட்) வரி, பனியன் துணி விற்பனைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு நேற்று அறிவித்தது; அறிவிப்பை கேட்ட, திருப்பூர் பனியன் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பனியன் உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்யப்படும்போது, நூற்பாலைகள் நான்கு சதவீத 'வாட்' வரியை பிடித்தம் செய்து கொள்கின்றன. கொள்முதல் செய்வோர், நூல் விலையுடன், வரியையும் சேர்த்து செலுத்துகின்றனர். இதில், ஏற்றுமதியாளர்களாக இருந்தால், உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகளை அனுப்பி வைத்த பின், முன்பு செலுத்திய 'வாட்' வரியை திரும்ப பெறுகின்றனர்.

உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தியாளர்களாக இருந்தால், நூல் கொள்முதலின்போது செலுத்தப்படும் வரித்தொகையை, அடுத்த முறை ஆர்டர் அனுப்பும்போது, விற்பனை விலையுடன் சேர்த்து வசூலிக்கின்றனர். இதுவரை, 'வாட்' வரியாக நான்கு சதவீதம் செலுத்தப்பட்டது. நூற்பாலைகள் நேரடியாக பனியன் துணியை விற்பனை செய்யும்போது, இதுவரை வரி விதிக்கப்படவில்லை. பெரிய அளவிலான நூற்பாலைகள், உற்பத்தியாகும் நூலிழைகள் மூலமாக, பனியன் துணிகளை தயாரித்து, ஆர்டர் அடிப்படையில் விற்பனை செய்தன. பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள், தங்களுடைய தொழிலும் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு வரி வருவாயும் பறிபோவதாக குற்றம்சாட்டினர். எனவே, பின்னலாடை துணி விற்பனைக்கும் வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு நான்கு சதவீதமாக இருந்த 'வாட்' வரியை ஐந்து சதவீதமாக உயர்த்தி உள்ளது. மேலும், கட்டுநூல் மற்றும் கைத்தறி ஜவுளி பொருட்கள் நீங்கலாக, அனைத்து வகையான ஜவுளி பொருட்களும் 'வாட்' வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பனியன் துணிகளை உற்பத்தி செய்து விற்ற நூற்பாலைகள் வரிவிதிப்புக்கு ஆளாகியுள்ளன. இது, பின்னலாடை தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன்: சாயப்பிரச்னை, கலால் வரி என நசிந்து போயுள்ள பனியன் தொழிலுக்கு புதிய வரி விதிக்கப்பட்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை. பனியன் துணிக்கு வரி விதிக்கப்பட்டதால், மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. தொழில் நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் அதே நிலையில் தொடரச் செய்ய வேண்டும். மாறாக, புதிய வரி விதிப்புகளை விதிக்கக்கூடாது. பனியன் தொழில் இருக்குமா? இல்லாமல் போகுமா? என்ற அளவுக்கு நிலை பிரச்னைகள் அதிகரித்துள்ளதால், அரசு தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே பனியன் தொழில் பாதுகாக்கப்படும். 'டீமா' தலைவர் முத்துரத்தினம்: பல்வேறு பிரச்னைகளால், ஜவுளித்தொழில் மந்தம் அடைந்துள்ளது. தமிழக அரசின் வரிவிதிப்பு, பாதிப்பில் உள்ள தொழில்துறையினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. வரி விதிப்பு, சரிந்துவரும் தொழிலை அழிவுப்பாதையில் தள்ளுவதாக உள்ளது. இன்றைய பிரச்னைகளில் இருந்து விடுபட அரசு கைதூக்கி விட வேண்டும். எனவே, மறுபரிசீலனை செய்து, பனியன் துணிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். 'சிஸ்மா' சங்க பொதுசெயலாளர் பாபுஜி: 'வாட்' வரி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது; அதை சற்று உயர்த்தினாலும் பரவாயில்லை. பனியன் துணிகளுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் இத்தகைய வரிவிதிப்பு, பனியன் தொழில் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதை போல் உள்ளது. தமிழக அரசு, பனியன் துணிக்கு விதிக்கப்பட்டுள்ள 'வாட்' வரியை தள்ளுபடி செய்வது குறித்து கருணையுடன் பரிசீலிக்க வேண்டும், என்றார். 'நிட்மா' வரவேற்பு 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறியதாவது: 'வாட்' வரியில் மாற்றம் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. பனியன் துணி கொள்முதல் செய்யும்போது, 'இன்புட் கிரெடிட்' எடுத்து பயன்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துணி கொள்முதல் செய்பவர்களுக்கு ஏற்பட்டு வந்த நஷ்டம் (நூலுக்கு செலுத்தும் 'வாட்' தொகை ) தவிர்க்கப்படுகிறது. பின்னலாடை துணி உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பனியன் துணிக்கு வரி விதித்துள்ளது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us