மும்பை குண்டுவெடிப்பு ஒரு இழிவான செயல் : ஹிலாரி உட்பட உலகத் தலைவர்கள் கண்டனம்
மும்பை குண்டுவெடிப்பு ஒரு இழிவான செயல் : ஹிலாரி உட்பட உலகத் தலைவர்கள் கண்டனம்
மும்பை குண்டுவெடிப்பு ஒரு இழிவான செயல் : ஹிலாரி உட்பட உலகத் தலைவர்கள் கண்டனம்

வாஷிங்டன் : 'மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், ஒரு இழிவான செயல்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கூறியதாவது: மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகள், மிகவும் இழிவான செயல். பயத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையிலான இதுபோன்ற வன்முறை செயல்கள், மிகவும் கண்டனத்துக்குரியவை. இந்த செயலை செய்தவர்கள், ஒருபோதும் தங்கள் நடவடிக்கைகளில் வெற்றியடைய முடியாது.
இதுபோன்ற துயரமான நேரங்களில், இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும். அடுத்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது குண்டு வெடிப்பு குறித்து, இந்திய தலைவர்களிடம் பேச்சு நடத்துவேன்.
இதற்கு முன்னரும், இதுபோன்ற பயங்கரவாத செயல்களால், இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம், அவர்கள், மிகவும் துணிச்சலாக செயல்பட்டதோடு, அந்த பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வந்தனர். இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பு குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு, எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஹிலாரி கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்,'இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை, அமெரிக்க அரசு கடுமையாக கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அமெரிக்கா செய்யும்'என்றார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டுள்ள அறிக்கையில்,'இந்த கோழைத்தனமான பயங்கரவாத சம்பவத்தை, இலங்கை கடுமையாக கண்டிக்கிறது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் அஞ்சலா மார்கெல் கூறுகையில்,'இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள், மிகவும் மோசமான நடவடிக்கை. இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில், இந்தியாவுக்கு, ஜெர்மனி எப்போதும் உதவியாக இருக்கும்'என்றார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டு கூறுகையில்,'அறிவற்றவர்கள் செய்த, கோழைத் தனமான செயல் இது. மும்பையில் இதற்கு முன்னரும், பயங்கரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். மும்பை மக்கள், அதிலிருந்து துணிச்சலாக மீண்டு வந்தனர். இந்த தாக்குதலில் இருந்தும், விரைவில் அவர்கள் மீண்டு வருவர்' என்றார்.


