மாநகராட்சி - உள்ளாட்சி துறைகளுக்கிடையே மோதல்
மாநகராட்சி - உள்ளாட்சி துறைகளுக்கிடையே மோதல்
மாநகராட்சி - உள்ளாட்சி துறைகளுக்கிடையே மோதல்
ADDED : ஜூலை 13, 2011 05:00 AM
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் போக்குவரத்துப் பாலம் ஆகியவற்றை திறப்பதில், மாநகராட்சிக்கும் உள்ளாட்சித் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.''புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் பிற பயன்பாட்டுக்கான கட்டடங்களைத் திறக்க, உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் புதிய கட்டடங்கள் திறக்கப்படும். அமைச்சரின் தேதி கிடைப்பதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம்'' என, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
இருப்பினும், 'தி.மு.க., வசம் உள்ள மாநகராட்சி என்பதால், புதிய கட்டடங்களை திறக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் அனுமதியளிக்க மறுக்கிறார்' என, மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்களது போட்டா - போட்டிக்கிடையே, பாலம் உள்ளிட்ட புதிய கட்டட பணிகள் முடிந்து, ஒரு மாதத்துக்கு மேலாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன.
உதாரணமாக,மேற்கு மாம்பலம் பகுதியில், போக்குவரத்து அதிகம் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம், பசுல்லா சாலை, ரங்கராஜபுரம் சாலை ஆகியவற்றை இணைக்கும்,'ஒய்' வடிவிலான பாலம் 965 மீட்டர் நீளத்தில் 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இதில், ரங்கராஜபுரம் - பசுல்லா சாலையை இணைக்கும் பகுதி பணிகள் முடிவடைந்துள்ளன.போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், பாலத்தின் இந்தப் பகுதியை திறக்க மாநகராட்சி தயாராக உள்ளது. அடுத்த சில நாட்களில் பசுல்லா சாலை பகுதிக்கான பாலம் திறக்கப்படும் என்று இருமுறை அறிவிக்கப் பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.
'ஆட்சி மாறியுள்ளதால், எதிர்கட்சிகள் நிர்வாகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி அளிப்பதில் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்' என மாநகராட்சி தி.மு.க., உறுப்பினர்கள் கூறினர். பணிகள் முடிந்த திட்டங்கள் பற்றி மேயர் சுப்ரமணியன், ''அரசின் அனுமதியை எதிர்பார்க்கிறோம். தாமதமானால், பொதுமக்கள் நலனைக் கருதி மாநகராட்சியே திறந்துவிடும்.போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி, ரங்கராஜபுரம் பாலம் விரைவில் திறக்கப்படும்,'' என்றார்.- எஸ்.திருநாவுக்கரசு -


