/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றால அருவிகளை அறிந்து கொள்வோம்உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த குற்றாலம்குற்றால அருவிகளை அறிந்து கொள்வோம்உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த குற்றாலம்
குற்றால அருவிகளை அறிந்து கொள்வோம்உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த குற்றாலம்
குற்றால அருவிகளை அறிந்து கொள்வோம்உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த குற்றாலம்
குற்றால அருவிகளை அறிந்து கொள்வோம்உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த குற்றாலம்
ADDED : ஜூலை 30, 2011 02:03 AM
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழக கலாச்சாரம் மற்றும் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற முக்கிய தலமாக குற்றாலம் குற்றாலத்தில் ஆர்ப்பரித்து அருவியாய் விழும் தண்ணீருக்கு மிகப் பெரிய மருத்துவக் குணம் உள்ளதாக மருத்துவர்களும், வரலாற்று ஏடுகளும் கூறுகின்றன.புதிதாக ஆற்று நீரிலோ, அருவி நீரிலோ குளித்தால் ஜலதோஷம் ஏற்படும். தொடர்ந்து ஒருவாரம் வரை மூக்கை உறிஞ்சியவாறு நடமாட வேண்டும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதில் குற்றாலம் மட்டுமே விதி விலக்கு. இந்த அருவியில் ஒருநாள் முழுவதும் குளித்தால் கூட உடம்பிற்கு ஒன்றும் ஏற்படாது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையும், அதிசயமும் கூட. அந்தளவு மருத்துவ குணம் நிறைந்ததும், அரியவகை மூலிகைகள் கலந்ததுமாகும் குற்றாலநீர்.கடந்த 1871ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியர்களால் நியமிக்கப்பட்ட மருத்துவக் கமிட்டி இந்த அருவிகளைப் பற்றி ஆராய்ந்து இந்த பகுதியில் நிலவும் ஒருவித காற்று (ஓசோன்) உடலுக்கு இதமளிக்கிறது. இந்த அருவிகளில் நீராடினால் நோயாளிகள் குணமடைந்து உடல்நலம் பெறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் குற்றாலம் நீர் தான் என கண்டறிந்தார்கள்.
இந்த குற்றால மலையில் மருத்துவ குணங்கள் நிறைந்த முக்கியத்துவமான மூலிகைகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனவாம். மழைநீர் இந்த மூலிகைகளைத் தழுவி அருவியில் கலப்பதாலேயே அத்தனை சிறப்பு! இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் இந்த செண்பக வனத்து சீமையில் உள்ள அருவியில் குளித்து மகிழ்ந்திட பல நாடுகளிலிருந்தும் வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி என 8 அருவிகள் இருக்கின்றன.
தேனருவி : திரிகூட மலையிலிருந்து உருவாகும் சிற்றருவி மலையின் மேல் 100அடி உயரத்திலிருந்து விழுகிறது. தேனருவி இந்த அருவிகளின் பாறைகளில் அதிகளவு காட்டுத் தேனீக்கள் உண்டு. மலையின் அடிவாரமான மெயினருவியிலிருந்து 5கி.மீ அடர்ந்த காட்டு பகுதியில் பயணிக்க வேண்டும். இந்த அருவிக்கு செல்வது மிகவும் அபாயகரமானது என்பதால் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
செண்பகாதேவி அருவி : தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ தூரம் கீழ் நோக்கி ஆறாக ஓடிவந்து 30அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. இங்குள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட விசேஷ தினத்தன்று மஞ்சள் மழை பெய்வதுண்டாம்.
மெயினருவி : இது தேனருவி, செண்பகாதேவி அருவி ஆகிய இரு அருவிகளுக்கும் கீழே இரண்டரை கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அருவி சுமார் 288 அடி உயரத்திலிருந்து பொங்குமாங்கடல் வரை ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கிபரந்து விழுகிறது.
ஐந்தருவி : பேரருவிக்கு அருகில் சுமார் 4.5 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது. திரிகூட மலையின் உச்சியிலிருந்து உருவாகி சிற்றாற்றின் ஒரு பிரிவில் பல கி.மீ காடுகளின் ஓடை வழியாக ஓடிவந்து 40அடி உயரத்திலிருந்து 5கிளைகளாக பிரிந்து பறந்து விழுகிறது.
பழத் தோட்ட அருவி : ஐந்தருவிக்கு மேல் சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் குளிக்க அனுமதி உண்டு.
புலியருவி : பழைய குற்றால அருவிக்கு செல்லும் பாதையில் 2கி.மீ தொலைவில் உள்ளது.
பழைய குற்றால அருவி : அழகனாறு என்ற நதியிலிருந்து வரும் நீர் ஏற்படுத்தியிருக்கும் அருவி இது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியின் தண்ணீர் கொட்டுகிறது.
படகு குழாம் : குற்றாலம் - ஐந்தருவி செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் 'வெண்ணமடை' என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருவர் செல்லும் படகுகள், நால்வர் செல்லும் படகுகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.
வண்ண மீன்கள் அருங்காட்சியகம், சித்திரசபை, தொல்பொருள் ஆய்வகம், திருக்குற்றால நாதர் ஆலயம், இலஞ்சி குமாரர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், பண்பொழிதிருமலைக்குமார சுவாமி கோயில், புளியரை தட்சிணாமூர்த்தி கோயில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், ஆரியங்காவு அச்சன்கோவில் சாஸ்தா கோயில், குண்டாறு நீர்த்தேக்கம், அடவி நயினார் நீர்த்தேக்கம் என அனைத்தும் குற்றாலத்தை ஒட்டி 15கி.மீ சுற்றுளவில்தான் அமைந்துள்ளன.
எப்படி செல்வது? : சென்னையிலிருந்து தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. சீசன் மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தனியார் விடுதிகள் 125க்கும் மேல் உள்ளது. இதுபோல் குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள் தின வாடகைக்கு கிடைக்கிறது.
அரசு விடுதிகள் 6 இருக்கிறது. இங்கு ஜூன் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் வரை ஒரு கட்டணமும், அக்டோபர் முதல் மே வரை ஒரு கட்டணமும் ஆக 3கால கட்டங்களில் தனித்தனியாக வாடகை வசூலிக்கப்படுகிறது. தினமலரில் வெளியான இக்கட்டுரையை படித்து பாதுகாத்து சுற்றுலா வரும் போது கையில் கொண்டு வந்து குளு.... குளு.... குற்றாலத்தை அனுபவிப்போமே!