"மாஜி' சரண்டரால் 2வது நாளாக கடை அடைப்பு :சேலம் வியாபாரிகள் கலக்கம்
"மாஜி' சரண்டரால் 2வது நாளாக கடை அடைப்பு :சேலம் வியாபாரிகள் கலக்கம்
"மாஜி' சரண்டரால் 2வது நாளாக கடை அடைப்பு :சேலம் வியாபாரிகள் கலக்கம்
ADDED : ஜூலை 27, 2011 12:53 AM
சேலம் : மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து கடைகளைத் திறக்க, போலீசார் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில், மாஜி அமைச்சர் சரண்டரையடுத்து, நேற்று முன்தினம் காலையிலேயே பஜார் தெரு, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கடைகள், அருணாச்சல ஆசாரி தெரு சந்திப்பில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்தக் கடைகளைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, போலீசாரே அடைக்கச் சொன்னதாக புகார் எழுந்தது. இது குறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் ஆகியோருக்கும், புகார்கள் பறந்தன. இந்தப் புகாரையடுத்து, உடனடியாக கடைகளைத் திறப்பதற்கும், வியாபாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கவும், சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணை நடக்கும் அலுவலகத்தைச் சுற்றிலும், இரண்டு துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர்கள் நான்கு பேர், இன்ஸ்பெக்டர்கள் ஐந்து பேர், எஸ்.ஐ.,க்கள் என, 200க்கும் மேற்பட்ட போலீசார், நேற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வளவு பேர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டும், நேற்று இரண்டாவது நாளாக, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட, போக்குவரத்து மாற்றமே நேற்றும் தொடர்ந்ததால், போக்குவரத்து நெரிசலும் தீர்ந்தபாடில்லை. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும், கோட்டை மாரியம்மன் கோவிலின் பின்புறம் வழியாகத் திருப்பி விடப்பட்டன. சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு, நேற்று போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.காத்திருந்த நிர்வாகிகளின் கூட்டம்
வீரபாண்டி ஆறுமுகம் சரணடைந்த நாளை விட, நேற்று கட்சி நிர்வாகிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று காலையில் வந்த மாஜி எம்.எல்.ஏ., சிவலிங்கம், தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருந்து, வழக்கறிஞர் மூர்த்தி, உதவியாளர் சேகருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டு இருந்தார். மாநகர தி.மு.க., பொருளாளர் அன்வர், மேயர் ரேகா பிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம், கவுன்சிலர் சாரதா தேவி என, 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். போலீஸின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நின்ற போதும், அவர்களை வெளியேறும் படி போலீஸார் தெரிவிக்கவில்லை.
உதவியாளர் சேகர் புலம்பல்
நேற்று முன்தினம் மாஜி அமைச்சருக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று போலீஸ் அதிகாரிகள் தங்களின் கிடுக்கிப்பிடியை சற்று அதிகரித்தனர். இது, ராஜ போக வாழ்க்கையை அனுபவித்து வந்த மாஜியின் உதவியாளர் சேகருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இவர் உதவியாளர் என்ற முறையில் வந்துள்ள நிலையில், போலீஸ் அதிகாரிகளிடம் தன் பழைய பாசத்தைக் கொண்டு, சலுகைகளைத் தொடர்ந்து பெற்று வந்தார். விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் பிச்சையிடம், பல முறை வெளிப்படையாக தனிமையிலும் பேசி வந்தார். அத்துடன், பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தங்குமிடத்தில் தண்ணீர் இல்லை. பாத்ரூமில் வசதி இல்லை. நேற்று முன்தினம் சேர் கொடுத்தனர், அதை ஸ்டூலாக மாற்றி விட்டனர். நேற்று வரை மதிப்புக் கொடுத்த அதிகாரிகள், இன்று மதிக்க மறுக்கின்றனர் என புலம்பினார்.
நமது சிறப்பு நிருபர்


