Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு: சுயதொழிலில் இப்படி ஒரு வினோதம்

சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு: சுயதொழிலில் இப்படி ஒரு வினோதம்

சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு: சுயதொழிலில் இப்படி ஒரு வினோதம்

சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு: சுயதொழிலில் இப்படி ஒரு வினோதம்

ADDED : செப் 06, 2011 11:55 PM


Google News
Latest Tamil News

கடலூர்: சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள், சைக்கிள்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில், கல்வித்தரம் உயர்ந்து வருவதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவுடன் உயர்நிலை கல்விக்கும், சம்பாதிப்பதற்காக பல்வேறு தொழில்களுக்கும் சென்று விடுகின்றனர். இதனால், சுயமாக தொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சைக்கிள் பழுதுபார்த்தல், தையற்கடை தொழில், மெக்கானிக், டிரைவர், பூத்தொடுப்பவர் போன்ற தொழில்களை, பயிற்சியின்றி திடுதிப்பென்று செய்துவிட முடியாது. தொழில் செய்யும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் பயிற்சி பெற்ற பின் தான், அவற்றை நேர்த்தியாகச் செய்ய முடியும். பயிற்சியின் போது, பெரிய அளவிலான வருவாய் கிடைக்காது.



உடனடியாக குடும்பத்திற்குத் தேவையான சம்பாத்தியமும் செய்ய முடியாது. மெக்கானிக் வேலைக்காக பயிற்சி பெறும் போது ஒரு இளைஞனுக்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு அந்த இளைஞன், 5 முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி பெற்ற பின்பே சிறந்த,'மெக்கானிக்' என்ற அந்தஸ்தை பெற முடியும். அதே இளைஞன் கட்டட தொழிலில் ஈடுபடும் போது, அவரது ஒரு நாள் ஊதியம் 350 முதல் 450 ரூபாய் கிடைப்பதால், கட்டட தொழில் செய்யவே பல இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால், சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளர்களை சாலையில் பார்ப்பதே அரிதாக உள்ளது. இருப்பவர்களோ சைக்கிள்களுக்கு பழுது அகற்றுவதற்கான தொகையை பல மடங்கு உயர்த்திக் கொண்டனர்.



சாதாரணமாக 350 ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் மாற்றுவதற்கு, 200 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வாங்கப்படுகிறது. ஒரு டயர் டியூப் மாற்றுவதற்கு அதிகபட்சமாக, 85 ரூபாய் கேட்கின்றனர். பஞ்சர் ஒட்டுவதற்கான கட்டணம் கூட 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளுக்கு இலவசமாக காற்று பிடித்துக் கொள்ளலாம். ஆனால், சைக்கிளின் இரண்டு சக்கரத்திற்கு காற்று பிடிக்க, ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.



பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 26 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இவர்களெல்லாம் சில மாதங்களுக்குப் பின், ஏதாவது ஒரு இடத்தில் பழுது பார்த்தே தீர வேண்டும். அதனால் உதிரிபாகங்கள், கூலி உயர்வினால் பழுதகற்ற முடியாமல், பலர் சைக்கிளை மூலையில் நிறுத்தி வைக்கும் அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். பெரிய அளவில் முதலீடு இல்லாமல், வெறும் 200 ரூபாய் முதலீட்டில் சைக்கிள் கடையை நடத்தி, நாளொன்றுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால், இளைஞர்கள் இதற்கு முன்வருவதில்லை. 'டிவி', மொபைல், டி.டி.பி., ஆபரேட்டர், மோட்டார் ரீவைண்டிங் உள்ளிட்ட பல கைத்தொழில்களை அரசே பயிற்சி கொடுத்து, கடன் உதவி செய்து வருவாய்க்கு வழிகாட்டுகிறது. அதே போன்று, சைக்கிள் பழுது பார்க்கவும், மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து பயிற்சி அளித்தால், இதுபோன்ற தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us