Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதியை அறிவித்தது என்.டி.ஏ.,

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதியை அறிவித்தது என்.டி.ஏ.,

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதியை அறிவித்தது என்.டி.ஏ.,

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதியை அறிவித்தது என்.டி.ஏ.,

ADDED : ஜூன் 29, 2024 11:54 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'நீட்' எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, மே மாத துவக்கத்தில் நடந்தது. தேசிய தேர்வு முகமை நடத்திய இத்தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கல்லுாரி உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான, யு.ஜி.சி., நெட் தேர்வு கடந்த 18ல் நடந்தது.

தேர்வு நடந்த மறுநாளே முறைகேடு இருப்பதாகக் கூறி, இத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.

ரசாயன அறிவியல், வளிமண்டலம், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில், பிஎச்.டி., சேர்க்கைக்கு, சி.எஸ்.ஐ.ஆர்., - யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டது.

இதே போல், நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான, என்.சி.இ.டி., எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 12ல் நடக்கவிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - அரசு கல்லுாரிகள் உட்பட, மத்திய மற்றும் மாநில பல்கலைகளில் சேர இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, யு.ஜி.சி., நெட் தேர்வு, ஆக., 21 - செப்., 4 வரை நடக்கவுள்ளது. 15 நாட்கள் நடக்கும் இத்தேர்வு, கணினி அடிப்படை முறையில் நடக்கிறது.

இது, முந்தைய பேனா மற்றும் காகித வடிவத்தில் இருந்து மாற்றப்பட்டுஉள்ளது.

இதேபோல், சி.எஸ்.ஐ.ஆர்., - யு.ஜி.சி., நெட் தேர்வு, ஜூலை 25 - 27 வரை நடக்கவுள்ளது. மேலும், தேசிய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை 10ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி, ஜூலை 6-ல் நடக்கும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us