Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் கை கொடுக்குமா?

பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் கை கொடுக்குமா?

பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் கை கொடுக்குமா?

பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் கை கொடுக்குமா?

ADDED : ஜூலை 29, 2011 11:43 PM


Google News
உடுமலை : ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் முக்கிய பங்கு வகித்த உடுமலை பகுதியில் மீண்டும் சாகுபடி பரப்பு அதிகரிக்க மத்திய பருத்தி கழகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., மண்டல பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு பல ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் பருத்தி உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில், 1990 ம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். செடிகளில் பரவிய மர்மநோய்களை கட்டுப்படுத்த பல ஆயிரம் ரூபாயை செலவிட்டு; பருத்திக்கு விலை கிடைக்காதது மற்றும் தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த பருத்தி இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் முற்றிலுமாக காணாமல் போனது. இதனால், சிறு நூற்பாலைகளுக்கு பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் சிறு திட்டம் மற்றும் நூற்பாலை நிர்வாகம் சார்பில் ஒப்பந்த சாகுபடி முறை கொண்டு வரப்பட்டு அதிகபட்சமாக நூறு ஏக்கர் வரை பருத்தி பயிரிடப்பட்டது. பி.ஏ.பி., ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும் குறிப்பிட்ட ஏக்கர் மட்டும் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு நீண்ட இழை பருத்தி ரகங்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், ஓரளவு விலையும் கிடைத்தது. கடந்தாண்டு விருகல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நீண்ட இழை பருத்தி ரகம் 200 ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டது. அறுவடையின் போது மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. இதனால், உள்ளூர் நூற்பாலைகளுக்கு தேவை அதிகரித்து பருத்தியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்ததால் விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைத்தது. இந்நிலையில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பாசனத்திற்கு உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் பருத்தி பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்காமல் பருத்தி சாகுபடிக்கு ஆர்வம் காட்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இழை பருத்தி ரக விதைகளுக்காக ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இது போன்ற பிரச்னைகளால் உடுமலை பகுதியில் பருத்தி சாகுபடி பரப்பு மீண்டும் அதிகரிப்பது கேள்விக்குறியாக உள்ளது. பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உதவிகள் வழங்கவும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் மத்திய பருத்தி கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் செயல்பாடுகள் முழுமையாக விவசாயிகளுக்கு நேரடியாக கிடைப்பதில்லை. கடந்த சீசனில் அடிவள்ளி உட்பட சில கிராமங்களில் தொழில் நுட்ப உதவி மையம் துவங்கப்பட்டது. பெயரளவிற்கு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லாமல் மையங்கள் காட்சிப்பொருளாக இருந்தன. விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டங்களும் பெயரளவிற்கு நடத்தப்பட்டு, கூட்டத்திற்கு 50 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கியதுடன தங்கள் கடமையை மத்திய பருத்தி கழகத்தினர் முடித்து கொண்டனர். இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்தனர். சாகுபடியின் போது பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்ட போதும் மத்திய பருத்தி கழகம் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. வரும் சீசனில் தரமான விதைகள் கிடைக்கவும், தொழில் நுட்ப கூட்டங்களை முறையாக நடத்தி இடுபொருட்களை மானியத்தில் வழங்கவும் மத்திய பருத்தி கழகம் முன்வர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். வேளாண்துறையும் கண்டுகொள்வதில்லை? மத்திய பருத்தி கழகம் போதுமான நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநில அரசின் வேளாண்துறை பருத்தி சாகுபடிக்காக எவ்வித பணிகளையும் மேற்கொள்வதில்லை. பல்வேறு சாகுபடிக்கு மானியங்கள் வழங்கப்படும் நிலையில் வேளாண்துறை பருத்தியை கண்டுகொள்வதில்லை. நோய் தாக்குதல் பிரச்னைக்காக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவானால் மட்டுமே ஆலோசனை கூட்டங்களை வேளாண்துறை நடத்துகிறது. மாநில அரசு வேளாண்துறை சார்பில் பருத்தி சாகுபடிக்கு தேவையான மானியங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us