சேலம் கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
சேலம் கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
சேலம் கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 27, 2011 07:37 PM
சேலம்: சேலம் கோர்ட்டில், வீரபாண்டி ஆறுமுகம் ஆஜர்படுத்தப்பட்ட போது, போலீசார் பாதுகாப்புப் பணியை, 'கோட்டை' விட்டனர்.
கோர்ட் வளாகத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மீது, தி.மு.க., தொண்டர்கள், தாக்குதலில் ஈடுபட்டனர். வீரபாண்டி ஆறுமுகம் கோர்ட்டுக்குள் அழைத்து வரப்பட்டபோது, அவருடன் தி.மு.க.,வினர் பலர் உள்ளே நுழைந்தனர். இதனால், கோர்ட்டில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், நுழைவு வாயில் கண்ணாடி உடைந்தது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவும், கோர்ட்டுக்குள் நுழைந்தார். அப்போது, பத்திரிகையாளர்களும் உள்ளே நுழைந்தனர். தி.மு.க.,வினர் சிலர், திடீரென, பத்திரிகை போட்டோகிராபர்கள் மீது, தாக்குதலில் ஈடுபட்டனர். பலர், கோர்ட் வளாகத்திலேயே, போட்டோகிராபர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசார், தி.மு.க.,வினரை கண்டு கொள்ளவில்லை. மாலை 4.55 மணிக்கு முன் ஜாமின் பெற்ற வீரபாண்டி ஆறுமுகம், கோர்ட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். நுழைவு வாயிலில் மீண்டும் பத்திரிகையாளர்களை, தி.மு.க.,வினர் சிலர் தாக்கினர். ஒரு சிலர் வழக்கறிஞர் உடையுடன் தாக்கியதால், பத்திரிகையாளர்களுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதும் போலீசார் வேடிக்கை பார்த்தனர். கோர்ட்டிலிருந்து வெளியே வந்த வீரபாண்டி ஆறுமுகம், அவருக்குச் சொந்தமான இன்னோவா காரில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கோர்ட்டுக்குள் கட்சிக் கரை வேஷ்டிகளை நுழைய விடாமல், சரியான பாதுகாப்பு வழங்கியிருந்தால், தேவையில்லாத தள்ளு முள்ளு மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், போலீசார் வீரபாண்டி ஆறுமுகம் விஷயத்தில், தொடர்ந்து கோட்டை விட்டு வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.