சுவாமி நிகமானந்த் மர்ம மரணம் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்
சுவாமி நிகமானந்த் மர்ம மரணம் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்
சுவாமி நிகமானந்த் மர்ம மரணம் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்
ADDED : ஆக 24, 2011 12:36 AM
டேராடூன் : சுவாமி நிகமானந்த் மரணம் குறித்து, அவருடைய குருவிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
ஹரித்துவாரில் உள்ள மாத்ரி சதன் ஆசிரமத்தைச் சேர்ந்தவர் சுவாமி நிகமானந்த். கங்கை நதி கரையோரம் முறைகேடாக குவாரிகள் நடப்பதை கண்டித்து, நான்கு மாத காலமாக ஹரித்துவாரில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து, கடந்த ஜூன் 13ம் தேதி மரணமடைந்தார். ஆனால், இவரது சாவில் மர்மம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் புகார் தெரிவித்தனர். குவாரி உரிமையாளர்கள் தான் இவருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டதாக புகார் கூறப்பட்டது. உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியாலும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் மாத்ரி சதன் ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அங்கு, ஆசிரம நிறுவனர் ஷிவானந்திடம் விசாரித்தனர். நிகமானந்த் அடக்கம் செய்யப்பட்ட சமாதியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
உண்ணாவிரதம் இருந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் மருத்துவமனையிலிருந்து ஆசிரமத்துக்கு நிகமானந்த் சடலம் கொண்டு வரப்பட்டது உள்ளிட்ட படங்களை சுவாமி ஷிவானந்த், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சுவாமி நிகமானந்த் சிகிச்சை பெற்ற டூன் மருத்துவமனை அதிகாரிகளிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.