Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சபரிமலையில் ரூ.17 கோடிக்கு முறைகேடு : இடைக்கால அறிக்கையில் குற்றச்சாட்டு

சபரிமலையில் ரூ.17 கோடிக்கு முறைகேடு : இடைக்கால அறிக்கையில் குற்றச்சாட்டு

சபரிமலையில் ரூ.17 கோடிக்கு முறைகேடு : இடைக்கால அறிக்கையில் குற்றச்சாட்டு

சபரிமலையில் ரூ.17 கோடிக்கு முறைகேடு : இடைக்கால அறிக்கையில் குற்றச்சாட்டு

ADDED : ஆக 09, 2011 12:35 AM


Google News

தொடுபுழா : சபரிமலையில் பல்வேறு பராமரிப்பு பணிகளில், ஒரு ஆண்டில், 16 கோடியே 55 லட்ச ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். இக்கோவில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பராமரிப்பில் இருந்து வருகிறது. கோவில் பகுதியான சன்னிதானம், பம்பா நதி, வாகனங்கள் நிறுத்துமிடமான நிலக்கல் ஆகிய இடங்களில், 2008-2009ம் ஆண்டில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 16 கோடியே 55 லட்ச ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, உள்துறை நிதி தணிக்கைத் துறை இணை இயக்குனர் விசாரணை நடத்தி, கேரள மாநில ஐகோர்ட்டில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அவ்வறிக்கையில், 'சபரிமலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை, செங்கன்னூர் பொதுப்பணிப் பிரிவு தான் மேற்கொண்டது. இப்பணியில், கான்கிரீட் பணிக்காக இரும்பு வாங்கப்படும்போது, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எப்போதும் டெண்டர் விடுவதில்லை. தேவஸ்வம் போர்டு உயரதிகாரிகளுக்கு விருப்பப்பட்ட இரும்பு வியாபாரியிடம் இருந்து இரும்புக் கம்பிகளை வாங்குவது வழக்கம். ஆனால், சபரிமலைக்கு 10 லட்ச ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதற்கு கேரள மாநில ஐகோர்ட் அனுமதி பெற வேண்டும். இதனால் தான், டெண்டர் போன்ற பணிகளை செய்யாமல், முறைகேடாக இரும்புக் கம்பிகள் வாங்கி வந்தனர். இவ்வாறு வாங்கப்பட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை. 'அதேபோல், நிலக்கல் பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் திட்டத்தில், கழிவுநீரகற்று வாரியத்திடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் துவக்கப்பட்டு, அது பயனற்று கிடக்கிறது. இதுகுறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும். மேலும், ரசீதுகள் இல்லாமல் செலவிடப்பட்ட 2 லட்சத்து 13 ஆயிரத்து 518 ரூபாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்ற வேண்டும். போலீசார் அறிவுறுத்தலின் பேரில், பம்பை - சன்னிதானம் இடையே 13 இடங்களில் பாதுகாப்பு கருவிகள் அமைத்ததிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு 16 கோடியே 55 லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஐகோர்ட் விரைவில் விசாரணை நடத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us