ADDED : ஆக 17, 2011 12:36 AM
குன்னூர் : 'சுற்றுலா' படப்பிடிப்பு விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்காக காத்திருப்பதால், படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'சுற்றுலா' என்ற சினிமா படப்பிடிப்பு, ஊட்டி, குன்னூர் உட்பட சுற்றுலா தலங்களில் நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரஜின், அவரது மனைவி நடிகை சான்ட்ரா, படப்பிடிப்பு குழுவினருக்குத் தெரியாமல், கடந்த 14ம் தேதி, 'எஸ்கேப்' ஆகினர். இதனால், படப்பிடிப்பை தொடர முடியாத நிலையுள்ளது. 'கால்ஷீட் முடிந்துவிட்டதால் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்து விட்டோம்' என நடிகர்கள் பிரஜின், சான்ட்ரா கூறி வருகின்றனர்.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் கூறியதாவது: நடிகர் சொல்லாமல் சென்றதால், தினமும் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது; படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், சின்னத் திரை நடிகர்கள் சங்கம் உட்பட அனைத்து சங்கங்களிலும் புகார் அளித்துள்ளோம்; அவர்களது முடிவுக்காக காத்துள்ளோம் என்றார்.