திருச்சி சோதனையில் 96 கிலோ தங்கம் பிடிபட்டது : அனைத்தும் நகைக் கடைக்குத் தானாம்!
திருச்சி சோதனையில் 96 கிலோ தங்கம் பிடிபட்டது : அனைத்தும் நகைக் கடைக்குத் தானாம்!
திருச்சி சோதனையில் 96 கிலோ தங்கம் பிடிபட்டது : அனைத்தும் நகைக் கடைக்குத் தானாம்!
ADDED : செப் 30, 2011 11:06 PM
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில், 96 கிலோ தங்கம் பிடிபட்டது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக, பிரபல நகைக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், அக்டோபர் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக, தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய இருகட்சியினரும், தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க, தேர்தல் கமிஷனும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி மாநகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் போலீஸ், பறக்கும் படை மற்றும் துணை ராணுவத்தினரால் கடுமையாகச் சோதிக்கப்படுகின்றன. சோதனையில், இதுவரை 34 கிலோ தங்கமும், 56 லட்ச ரூபாய் பணமும் பிடிபட்டுள்ளது. இதில், 40 லட்ச ரூபாய் பணமும், 34 கிலோ தங்கமும் உரிய ஆவணங்கள் இல்லாததால், வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு, 10 மணியளவில், திருச்சி அருகே சோமரசம்பேட்டை உய்யகொண்டான் செக்போஸ்ட்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த பொலீரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில், ஐந்தரை கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், இருந்த விஜயகுமார் உள்ளிட் மூவர், திருச்சியில் உள்ள ஸ்ரீகுமரன் நகைக் கடைக்கு தங்கம் செல்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தங்கம் திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிது நேரத்தில், கடையின் மேலாளர் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து காண்பித்து, தங்கத்தை மீட்டுச் சென்றார்.
நேற்று காலை திருச்சி- கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள குடமுருட்டி பாலம் செக்போஸ்ட்டில், போலீசாரும், பறக்கும் படை தாசில்தார் பவானியும் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வந்த டெம்போ டிராவலர் வேனில், துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி ஆட்களின் பாதுகாப்புடன், 91 கிலோ தங்கம் கொண்டு வரப்பட்டது.
அதுகுறித்து விசாரித்தபோது, திருச்சி, 'தனிஷ்க்' ஜுவல்லரிக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் என்று, வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, 91 கிலோ தங்கம் கொண்டு வரப்பட்ட வேனை, திருச்சி தாசில்தார் அலுவலகத்துக்குப் பறக்கும் படை தாசில்தார் பவானி கொண்டு வந்தார்.
அதற்குள், ஜுவல்லரி மேலாளர் வந்து, அதிகாரிகளைச் சந்தித்து, தங்கத்துக்கு உரிய ஆவணங்களைக் காண்பித்தனர். அதை, அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, 96.5 கிலோ தங்கம் திருச்சி நகைக் கடைகளுக்குக் கொண்டு வந்தது பிடிபட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதால், தங்கம் பிடிபட்ட விஷயம் உடனடியாக முடிவுக்கு வந்து விட்டது. திருச்சி குடமுருட்டி செக்போஸ்ட்டில், நேற்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், குளித்தலையிலிருந்து வந்த லோகன் காரை சோதனை செய்தனர். காரில் வந்த சின்னையன் என்பவர், இரண்டரை லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தார். அதை, பறக்கும் படை தாசில்தார் பவானி பறிமுதல் செய்தார். ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்களை சின்னையன் ஒப்படைத்து விட்டதால், பணம் உடனடியாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.