தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தாமதம்
தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தாமதம்
தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தாமதம்
ADDED : செப் 28, 2011 12:57 AM
நாமக்கல்: 'நாமக்கல் நகராட்சி வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில், தி.மு.க., வில் தாமதம் செய்வதால், கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சேர்மன், கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் 'விறுவிறு'வென வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.தி.மு.க., சார்பில், நாமக்கல் நகராட்சி சேர்மன் வேட்பாளர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வார்டுகளில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.'வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளது.
இந்நிலையில் ஒரே வார்டில் போட்டியிட கட்சியினர் பலர் விருப்ப மனு அளித்திருக்கும் நிலையில், முன்கூட்டியே வேட்பாளர் பட்டியல் வெளியிட்டால், அதிருப்தி வேட்பாளர் சுயேட்சையாக களம் இறங்க வாய்ப்புள்ளது. அதனால் கடைசி நாளில் பட்டியல் வெளியானால், முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்யவர். பிறர், மனுதாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகும்' என, கட்சியின் மாவட்ட தலைமை முடிவு செய்திருப்பதாக, தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சி சேர்மன் வேட்பாளர் பட்டியல் கட்சித் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நகராட்சி வார்டு கவுன்சிலர் பட்டியலை கட்சியின் மாவட்ட தலைமை வெளியிட்டது. அதில் நாமக்கல், திருச்செங்கோடு நகராட்சி வார்டு கவுன்சிலர் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.நாமக்கல் நகராட்சியுடன், 9 பஞ்சாயத்துகள் புதிதாக இணைந்துள்ளதால், வார்டு எண்ணிக்கையும், 39 ஆக உயர்ந்துள்ளது. அதனால் பஞ்சாயத்து கிளைக செயலாளர்களும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை தேர்வு செய்வதில் குழப்பம் உள்ளது.அதுபோல் நகரச் செயலாளரான சேர்மன் வேட்பாளர் செல்வராஜ் பட்டியல் ஒன்றை மாவட்ட செயலாளர் காந்திச்செல்வனிடம் வழங்கியுள்ளார். மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வன், நாமக்கல் நகரச் செயலாளராக இருந்ததால், அவர் தனது ஆதரவாளர்களை சேர்த்து ஒரு பட்டியல் வைத்துள்ளார்.அவர்கள் இருவரும், இருவேறு பட்டியல் வைத்துள்ளதால், வேட்பாளர் அறிவிப்பில் தொடர் குழப்பம் நிலவுகிறது. அதே நேரத்தில் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது, என்றனர்.போட்டி வேட்பாளர் களம் இறங்கியாச்சுநாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். இருப்பினும், நாமக்கல் நகராட்சி தி.மு.க., வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் கட்சியை சேர்ந்த மூர்த்தி 36வது வார்டு, சரவணன் 14வது வார்டு, நந்தினிதேவி ஆகியோர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, அறிவிப்பு வெளியாவதற்கு முன் மனு தாக்கல் செய்து விட்டனர். அந்த வார்டுகளுக்கு வேறு நபர்கள் அறிவிக்கப்பட்டால், மூவரும் போட்டி வேட்பாளராக களம் இறங்குவர் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.