மும்பை குண்டு வெடிப்பால் இந்தியா - பாக்., பேச்சுவார்த்தையில் பாதிப்பா? : மறுக்கிறார் கிருஷ்ணா
மும்பை குண்டு வெடிப்பால் இந்தியா - பாக்., பேச்சுவார்த்தையில் பாதிப்பா? : மறுக்கிறார் கிருஷ்ணா
மும்பை குண்டு வெடிப்பால் இந்தியா - பாக்., பேச்சுவார்த்தையில் பாதிப்பா? : மறுக்கிறார் கிருஷ்ணா

புதுடில்லி : ''மும்பை குண்டு வெடிப்பு காரணமாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியின் இந்தியப் பயணத் திட்டத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்தியா - அமெரிக்கா உறவு குறித்த வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். தன் பயணத்தின் போது, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியொன்றிலும் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் மூன்று இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த பயங்கர சம்பவத்தில், 17 பேர் பலியாகினர்; 131 பேர் படுகாயமடைந்தனர். இதனால், ஹிலாரியின் இந்தியப் பயணம் தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இதனிடையே, ஆப்கன் அமைதி கவுன்சில் தலைவர் பர்கானுதீன் ரப்பானியுடன் நேற்று, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் இடையே கிருஷ்ணா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியின் பயணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. திட்டமிட்டபடி, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்பார். மும்பையில், மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.
எனவே, ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் பலியான, படுகாயமடைந்த ஒவ்வொரு சகோதரன், சகோதரியின் குடும்ப துக்கத்திலும் நாடு பங்கேற்கிறது. அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக, இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குண்டு வெடிப்பு காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும், ஆப்கன் அமைதி கவுன்சில் தலைவருமான பர்கானுதீன் ரப்பானி, மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்பாவிகள் உயிரிழப்பதற்கு காரணமான மும்பை தாக்குதலுக்கு, எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கன் மக்கள் மட்டுமல்லாது, இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதம், ஒரு நாட்டின் பிரச்னை அல்ல; அது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனினும், ராணுவத்தைக் கொண்டு, பயங்கரவாதத்திற்கு தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியான நடவடிக்கைகளால் மட்டுமே, பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இவ்வாறு ரப்பானி கூறினார்.