UPDATED : ஜூலை 28, 2011 11:47 AM
ADDED : ஜூலை 28, 2011 05:18 AM
பெங்களூரு : அரசியல் வளர்ச்சிகளை நுணுக்கமாக கவனித்து வரும் முதல்வர் எடியூரப்பா, தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை முதல்வர் எடியூரப்பா, தனியார் காரில் ரகசிய இடத்திற்கு சென்று, முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூட்டத்துக்குப் பின்னர், டாலர்ஸ் காலனியிலுள்ள தன் வீட்டுக்கு திரும்பினார். தனக்கு நம்பிக்கையான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தென் மாநிலங்களில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க காரணமான எடியூரப்பாவை, முதல்வர் பதவியிலிருந்து மாற்றுவது சுலபமான பணியுமல்ல. இதை அறிந்து கட்சியின் மேலிட தலைவர்கள், எடியூரப்பாவின் மனதை மாற்றி, ராஜினாமா கோர முற்பட்டுள்ளனர்.அடுத்த முதல்வர் என்றே கருதப்படும் சதானந்த கவுடாவை அக்கட்சி தலைவர்கள், டில்லிக்கு அழைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதே நேரத்தில், எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரான லேஹர் சிங்கும் டில்லி சென்றுள்ளார். இந்த அரசியல் வளர்ச்சிகளால் எடியூரப்பா சோர்ந்து போனதாகத் தெரியவில்லை.
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்ட முதல்வர் எடியூரப்பா பேசியதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகள் நானே முதல்வராக தொடருவேன். மக்களின் ஆசிர்வாதம் எனக்குள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைவர்கள் என்னைக் கேட்கவில்லை. ஆனால், தேவகவுடா, குமாரசாமி மட்டுமே, நான் ராஜினாமா செய்ய கேட்கின்றனர்.கர்நாடக மாநிலத்தின் அபிவிருத்திக்காக இரவும், பகலும் உழைக்கிறேன். தினமும் மத்திய பா.ஜ., தலைவர்களுடன் பேசி வருகிறேன். எங்கள் கட்சி தேசிய கட்சியாகும். தேவகவுடாவின் கட்சி போன்றதல்ல. சட்டசபையை கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், தேர்தலை சந்திப்போம். எனக்கு அடுத்து யார் வரவேண்டும் என்று மத்திய தலைவர்கள் கேட்கவில்லை. தற்போது அந்த கேள்வியே எழவில்லை என்றார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வீட்டில் இன்று நடக்கவுள்ள கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில், எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்படவுள்ளது. சட்ட விரோத சுரங்கத் தொழில் குறித்து லோக் ஆயுக்தா அரசுக்கு அளித்துள்ள அறிக்கை, மாநில அரசியலின் போக்கையே மாற்றிவிடும் என கருதப்படுகிறது.