பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம்
பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம்
பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம்
ADDED : ஜூலை 14, 2011 01:02 AM

புதுடில்லி : ''மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நேற்றிரவு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் டில்லியில் உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 54 ஆகவும் உள்ளது. இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என எண்ணுகிறேன். 6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


