டில்லி ஐகோர்ட் வளாகத்தில் கேமரா பொருத்த முடிவு
டில்லி ஐகோர்ட் வளாகத்தில் கேமரா பொருத்த முடிவு
டில்லி ஐகோர்ட் வளாகத்தில் கேமரா பொருத்த முடிவு
ADDED : செப் 09, 2011 12:52 AM
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் மூன்று வாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட் வளாகத்தில், கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போதே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பரிந்துரை செய்யப்பட்டது. இதை உடனே அமல்படுத்தாததால், தற்போது மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று உயர்மட்ட கூட்டம் நடந்தது. டில்லி தலைமை செயலர், சிறப்பு போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐகோர்ட்டை சுற்றியுள்ள சாலைகளில் நெரிசலை குறைக்கவும், ஐகோர்ட்டின் நுழைவாயில்களில் வாகனங்களை பரிசோதிக்கும் ஸ்கேனர் கருவிகளை பொருத்தவும், ஏற்கனவே திட்டமிட்டதுடன், கூடுதலாக 49 கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களில் பொருத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மூன்று வார காலத்தில் இந்த கேமராக்கள் பொருத்தப்படும் என, ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக வாங்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றையும் இந்த வளாகத்தில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.