இன்ஜினியரிங் கல்லூரிக்காக கால்வாய் ஆக்கிரமிப்பு:கலெக்டர் சம்மனை ரத்து செய்யக் கோரி அழகிரி மனு
இன்ஜினியரிங் கல்லூரிக்காக கால்வாய் ஆக்கிரமிப்பு:கலெக்டர் சம்மனை ரத்து செய்யக் கோரி அழகிரி மனு
இன்ஜினியரிங் கல்லூரிக்காக கால்வாய் ஆக்கிரமிப்பு:கலெக்டர் சம்மனை ரத்து செய்யக் கோரி அழகிரி மனு
மதுரை:மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை அருகே, தயா இன்ஜினியரிங் கல்லூரிக்காக, நீர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து விளக்கமளிக்க, கலெக்டர் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலெக்டர் விசாரிக்கக் கூடாது என உத்தரவிட்டது.மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான, தயா இன்ஜினியரிங் கல்லூரிக்காக, கரிசல்குளம் கண்மாய் மடை மற்றும் நீர் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த கலெக்டர், இதுகுறித்து விளக்கமளிக்க, செப்., 16ல் ஆஜராக அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதிக்கு சம்மன் அனுப்பினார். சம்மனை ரத்து செய்ய, அழகிரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மனுவில், அவர் கூறியதாவது:கலெக்டரின் சம்மன் உள்நோக்கம் கொண்டது. சம்மன் செப்., 9ல் வழங்கப்படுவதற்கு முதல் நாளே, மீடியாக்களில் செய்தி வெளியானது. சம்மனில் தவறு நடந்ததாக முடிவு செய்து, விளக்கமளிக்க கலெக்டர் கூறியுள்ளார். சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார்.நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வழக்கறிஞர் வீர.கதிரவன், ''கலெக்டர் சம்மனில், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நடத்தும் முன், இவ்வாறு குறிப்பிட்டதைப் பார்த்தால், நியாயமாக விசாரிக்க மாட்டார். கலெக்டரிடம், ஒரு நாளைக்கு ஏராளமானோர் மனு கொடுக்கின்றனர். கல்லூரிக்கு எதிரான மனு மீது, உடனடியாக சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது'' என்றார்.சம்மனை பரிசீலித்த நீதிபதிகள், ''கலெக்டர் சம்மனில், தேவையில்லாத தகவல்களைத் தெரிவித்துள்ளார். காந்தி பொன்மொழிகளை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு என முடிவு செய்து விளக்கம் கேட்டுள்ளார். சம்மனை திரும்பப் பெற வேண்டும். அல்லது தேவையற்ற வார்த்தைகளை நீக்கி, விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து, கலெக்டரிடம் கேட்டுத் தெரிவிப்பதாக, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் கேட்டார். அதையடுத்து, விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.வழக்கு நிலுவையில் இருப்பதால், இன்று அழகிரி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்கக் கூடாது என, கலெக்டரை கேட்டுக் கொள்ளும்படி, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஐகோர்ட் கிளை உத்தரவால், அழகிரி இன்று கலெக்டர் முன் ஆஜராக வேண்டியது இல்லை.