சென்னை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது, பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி தெருவில் பாஸ்கரன் மற்றும் அவரது சகோதரர்களின் பெயரில் நாலரை கிரவுண்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, அவரது சகோதரி உமா மகேஸ்வரி உள்ளிட்ட சிலர் சோமசேகரை சந்தித்து, 'நாலரை கிரவுண்ட் நிலத்தை நாங்கள் வாங்கித் தருகிறோம்' எனக் கூறி முன்பணமாக, 1 கோடியே 40 லட்ச ரூபாயை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றவர்கள் கூறியபடி நிலத்தை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை.இதுகுறித்து, போலீஸ் கமிஷனரிடம் சோமசேகர் புகார் தந்தார். பாண்டி பஜார் போலீஸ் விசாரணைக்கு புகார் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக விசாரணை செய்த போலீசார், பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படும் ஜோதிமணி, அவரது சகோதரி உமா மகேஸ்வரி, ஆனந்த் மற்றும் இரண்டு நிலத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.