ADDED : ஆக 03, 2011 10:44 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் 20 மைக்ரான் தடிமனுக்கு குறைவான எந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தடை உள்ளது.
ஆனால்,பல்வேறு வணிக நிறுவனங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நெறிமுறைகள் வகுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் தட்டுகள் அனைத்து வகை தடிமன்களிலும் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது; வணிக நிறுவனங்களில் பொட்டலம் செய்யப்படும் (பருப்பு, சர்க்கரை போன்றவை) 40 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே பொட்டலம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். பயன்படுத்தப்படும் பைகளின் தடிமனை சோதனை செய்ய உபகரணங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு ஆய்வு அலுவலர்களுக்கு விரைவில் வழங்கப்படும். நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணிகள் காலை 9.00 மணிக்குள் நிறைவு பெறுகிறது. ஆனால், சில கடை உரிமையாளர்கள் கடைகளை திறக்கும்போது, உள்ளிருந்த குப்பைகளை வெளியே கொட்டி அசுத்தப்படுத்துவது கண்டறியப்படுகிறது. எனவே, கடையின் குப்பைகளை முந்தைய நாள் இரவே குப்பை தொட்டிகளில் போட்டு செல்ல வேண்டும். இதனை தவிர்த்து காலையில் வெளி பகுதிகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.


