ஐந்து மாத குழந்தை தாயிடம் ஒப்படைப்பு : ஐகோர்ட்டில் உருக்கம்
ஐந்து மாத குழந்தை தாயிடம் ஒப்படைப்பு : ஐகோர்ட்டில் உருக்கம்
ஐந்து மாத குழந்தை தாயிடம் ஒப்படைப்பு : ஐகோர்ட்டில் உருக்கம்
ADDED : செப் 30, 2011 11:10 PM
சென்னை: ஐந்து மாதக் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
குழந்தையைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தாயார் சென்றார். கோவை, ஜெயப் பிரகாஷ் நகரைச் சேர்ந்த சசிகலா பிரபா, தாக்கல் செய்த மனுவில், 'எனக்கும், ராஜன் என்பவருக்கும், 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த மார்ச் மாதம், பெண் குழந்தை பிறந்தது. கோவையில், பழனிச்சாமி காலனியில் வசிக்கும் ஜெயலட்சுமி என்பவர், மூன்று பேருடன் என் பெற்றோர் வீட்டுக்கு வந்து, என் குழந்தையைப் பறித்துக் கொண்டு சென்று விட்டார். என் கணவருடன் ஜெயலட்சுமி நெருக்கமாக உள்ளார். அவருக்கு, ஆள் பலம் உள்ளது. ஜெயலட்சுமியிடம் இருந்து, என் குழந்தையை மீட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். என்னிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கோர்ட்டுக்கு, ஐந்து மாத குழந்தையைக் கொண்டு வந்திருந்தனர். ஜெயலட்சுமியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். குழந்தையை தாயாரிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, தாயாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையைப் பெற்றுக் கொண்ட தாயார் சசிகலா பிரபா, தனது வழக்கறிஞருடன் சென்றார்.