நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு
ADDED : மார் 11, 2025 12:18 PM

சென்னை: உணவுத்துறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இதுகுறித்த தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது;
கடந்த 2024 ஜூன் மாதம் ரேஷன் துறையில் போக்குவரத்து டெண்டரில் சந்தை மதிப்பை விட 107% அதிகமான தொகைக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும், வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள்.
இதுகுறித்த 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சார்பில், சி.பி.ஐ, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவுத்துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர்கள், உணவு ஆணையக இயக்குனர், மாநில நிதித்துறை செயலர் என அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் அரசு கொள்முதல் செய்த பின்னர், அதனை சேமிப்பு மையத்திற்கு அனுப்பவும், ரயிலுக்கு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பவும், பின்பு நெல்லை அரிசியாக மாற்றி அதனை தாலுகா கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஜூன் 2023ல் ரேஷன் துறை போக்குவரத்து 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டது.
இந்த டெண்டர்கள் முருகா என்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 107% மேலான விலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.