Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குறைந்த உயரத்தில் ஆரணி ஆற்றின் கரைகள் : நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

குறைந்த உயரத்தில் ஆரணி ஆற்றின் கரைகள் : நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

குறைந்த உயரத்தில் ஆரணி ஆற்றின் கரைகள் : நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

குறைந்த உயரத்தில் ஆரணி ஆற்றின் கரைகள் : நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஆக 01, 2011 01:51 AM


Google News

பொன்னேரி : ஆரணி ஆற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான உயரத்தில் போடப்படும் கரைகளால், வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளதால், நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள், கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆற்றுநீர் பாசனத்தை நம்பி, விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது, பழவேற்காடு முதல், ஆரணி பகுதி வரை, ஆற்றின் இருபுறமும், 43 கி.மீ., தொலைவுக்கு கரைகள் பலப்படுத்தப்படுகின்றன. இதற்காக, 12.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.



பொன்னேரி அடுத்த ஏ.ஆர்.பாளையம் கிராமத்தில், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கவும், மூன்று கி.மீ., தொலைவுக்கு கரைகளை பலப்படுத்தவும், 5.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.தடுப்பணை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து, கம்மார்பாளையம் கிராமம் வரை உள்ள ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணிகளில், ஏற்கனவே இருந்த கரையின் உயரத்தைவிட, ஒரு மீட்டர் உயரம் குறைவான அளவில் அமைக்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளூக்கு முன் இதேபகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு, 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.



தற்போது, அதே பகுதியில் குறைவான உயரத்தில் கரைகள் அமைக்கப்படுவதால், மழைக்காலங்களில் கரை உடையும் அபாயம் உள்ளது.மேலும், கண்டிகைகாலனி, கம்மார்பாளையம், கம்மார்பாளையம் காலனி, சத்திரம், பெரும்பேடு, பெரும்பேடு குப்பம் உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் வெள்ள சேதத்தில் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஏ.ஆர்.பாளையம் கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்படும் பகுதிகளில், கரைகளின் உயரத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆரணியாற்று கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us