
வெட்கமற்ற பணம் பிடுங்கிகள்!
க.கேசவன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஊழலுக்கு எதிராக, இரண்டாவது சுதந்திர போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவை, மத்திய அரசு கைது செய்து, பின், விடுதலை செய்தது, வன்மையாக கண்டிக்கத் தக்கது.ஜனநாயக நாட்டில், ஜாதி, மதம், திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டோருக்கெல்லாம், மக்களிடம் பணத்திற்கு ஓட்டுகளை பெற்று, எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.பி.,யாகவோ மாறி, பார்லிமென்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் ஏன் கருத்து சொல்லக் கூடாது; அவர்கள் கூறும், ஜன் லோக்பால் மசோதாவையும் ஆதரிக்கக் கூடாது?
நம் சுதந்திர இந்தியாவின், 65ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மேதையான, நம் பிரதமர் உரையாற்றும் போது, அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு, மக்களின் வரிப்பணம் செல்வதை தடுப்பதாகவும், நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரிய தடைக்கல்லாக இருப்பதாகவும் கவலைப்படுகிறார்.
இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, கடுமையான ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படை கருத்தை வலியுறுத்துவதாகத்தான் தெரிகிறது. பின், ஏன் கடுமையான லோக்பால் மசோதாவை உருவாக்க மட்டும் முன் வருவதில்லை?
எங்களையும்கவனியுங்கள்!
எச்.ஏகாம்பரம் செ.மா. போ., (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அபராதம்! மக்களுக்கு அரசு சேவை யை வழங்குவதில் தாமதப்படுத்தினால்...' என்ற செய்தி கண்டேன். நல்ல சட்டம்; ஆனால், 'சட்டங்கள் நிறைய இருக்கின்றன; நியாயங்கள் குறைவு' என்ற பழமொழி போல வே, நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, செப்., 2010 ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஓய்வு பெற்றவர்களுக்கும், ஓய்வூதியம் - பஞ்சப்படி மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.அனைத்து போக்குவரத்துக் கழக பஸ்களிலும், துணையுடன் இலவசமாகச் செல்ல, அனுமதிக்கும் சட்டமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன் கிட்டியது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஒப்பந்த பயன் ஓராண்டை கடந்தும் கிடைக்கவில்லை.
ஓய்வூதியர்களுக்கான சங்கங்கள், சந்தா மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். பலமுறை போக்குவரத்துத் துறை செயலர், அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும், விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரை, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஒப்பந்தப் பயன் தரப்படவில்லை. இது குறித்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒரே பதில், 'பரிசீலனையில் உள்ளது' என்பது மட்டுமே.'அநீதிக்கு ஆட்படுவதை விட, அநீதி இழைப் பது அதிகக் கேவலமானது' என, அண்ணாதுரை கூறியுள்ளார். ஒரு வேளை, இது இன்றைக் குப் பொருந்தாது போலும்!
அப்பாவிகள்செத்தால் என்ன?
மிகக் கொடூரமாக திட்டமிட்டு, நாட்டின் பிரதமரையே கொன்று குவித்த குற்றவாளிகளுக்கே இரக்கம் காட்டும் அளவிற்கு, மனிதாபிமானம் உள்ளவர்களாயிற்றே நம் அரசியல்வாதிகள்!அப்சல்குருவிற்கே ஆதரவளிக்கும் நம் ஜனநாயகம், எத்தனை தாக்குதல் நடந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் இரக்க குணத்துடன் இயங்கும்.நாட்டில் குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் கொடுத்து வைத்தவர்கள். அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக செத்தால் அவர்களுக்கென்ன கவலை?வாழ்க பாரதம்!
நல்ல முடிவுவரவேற்போம்!
அதே சமயம் பார்களிலும், தனியார்கள் மூலம் கள்ள விற்பனை படு ஜோராக நடைபெறும். அதற்கு காவல்துறையில் உள்ள சிலர் துணை இருப்பர். இதில், அரசின் தனி கவனம் தேவை. 80 ரூபாய் பாட்டில், 150 ரூபாய்க்கு விற்கப்படும். எதற்காக கடைகள் கூடாது என, அரசு அறிவித்ததோ, அது பலன் இல்லாமல் போய்விடும்.இந்த தினங்களில், 'குடி'மகன்களால், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அன்று, வழக்கு, வாய்தா ஏற்படும். சட்டம் போட்டால் மட்டும் போதாது, அந்த சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த சட்டத்தையும் பெரும்பாலானோர் மதிப்பதில்லை.