/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீர் குழாயில் மழைநீரைத் திறந்து விடுவதால் குளறுபடிகுடிநீர் குழாயில் மழைநீரைத் திறந்து விடுவதால் குளறுபடி
குடிநீர் குழாயில் மழைநீரைத் திறந்து விடுவதால் குளறுபடி
குடிநீர் குழாயில் மழைநீரைத் திறந்து விடுவதால் குளறுபடி
குடிநீர் குழாயில் மழைநீரைத் திறந்து விடுவதால் குளறுபடி
ADDED : ஆக 23, 2011 11:42 PM
சென்னை:சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில்,
பல இடங்களில் குடிநீர் குழாயில் மழைநீரை மாநகராட்சி அலுவலர்கள் திருப்பி
விடுகின்றனர். மழை நீர் கலந்த குடிநீர் வினியோகத்தால் பொதுமக்கள்
பாதிப்படைந்துள்ளனர். இந்த குளறுபடியை போக்க குடிநீர் வடிகால்வாரியம்
மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது,
மழை காலம் துவங்கி விட்ட நிலையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை
மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள்
மூடப்பட்டுள்ளதால், குடிநீர் குழாயில், மழைநீர் திருப்பி விடப்படுகிறது.
இதனால், பல இடங்களில் குடிநீர் மஞ்சள் நிறத்துடன் கலங்கலாக வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்தமாக்கி அனுப்பினாலும் வீட்டுக்கு வரும்
போது, கலப்படமான மஞ்சள் நீராக தான் வருகிறது.
கலப்பட குடிநீர்:இதுகுறித்து, பாரிமுனை மண்ணடி பகுதியை சேர்ந்த ராஜன்
என்பவர் கூறும்போது, ''பாரிமுனை பகுதியில், லேசான மழை வந்து விட்டாலே,
குடிநீர் மஞ்சள் நிறமாக, துர்நாற்றத்துடன் வருகிறது.
இதுகுறித்து, குடிநீர்
வாரிய உதவி செயற்பொறியாளர்களிடம் புகார் செய்தால், மாநகராட்சியினர்
மழைநீரை குடிநீர் குழாயில் திறந்து விடுகின்றனர்; அதனால், நாங்கள் ஒன்றும்
செய்ய முடியாது என்கிறார்'' என்றார்.மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம்
கேட்டபோது,''தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, மழைநீர் வடிகால் பணிகள்
தேக்கமடைந்தன. தற்போது பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தெருக்களில்
வெள்ளம் தேங்குவதை தடுக்க, குடிநீர் குழாயில் திறந்து விடுவதைத் தவிர வேறு
வழியில்லை'' என்றார்.ஏரிகள், சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் வழங்கல்
நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து, சென்னை குடிநீர் வாரிய குழாய்கள் மூலம் தான்
தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் மழை காலங்களில், தெருவில் ஓடும்
மழைநீரும், குடிநீர் கால்வாய்கள் மற்றும் குழாய்களில் விடப்படுவதால்,
மழைகாலங்களில் சென்னையில் தரமான குடிநீர் கிடைக்காத நிலை
ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி மந்தம்:மழைநீர் கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க,
மாநகராட்சி எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. தற்போது, மெட்ரோ ரயில்
பணிகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாற்று இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும்
பணி துவங்கி உள்ளது. ஆனால், இந்த பணிகள் மிக மந்தகதியில் நடந்து வருகிறது.
குடிநீரில் மழைநீர் கலந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.