பட்டுக்கோட்டையில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 38 பேர் காயம்
பட்டுக்கோட்டையில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 38 பேர் காயம்
பட்டுக்கோட்டையில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 38 பேர் காயம்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்ற பஸ் கவிழ்ந்து, ஒருவர் பலியானார்; 38 பேர் காயமடைந்தனர்.
பஸ்சில் பயணம் செய்த 39 பேர், பலத்த காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர், ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரெங்கராஜன், அ.தி.மு.க., நகர்மன்ற தலைவருக்கான வேட்பாளரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான ஜவகர்பாபு உட்பட பலர், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அவசர உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஒருவர் பலி: தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றவர்களில் முகமது புகாரி மகம் சர்புதீன், 40, என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பஸ் டிரைவர் பன்னீர்செல்வம், 35, மிக ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் : விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த தரைப்பாலத்தில் தான், 2004ம் ஆண்டு பி.எல்.ஏ., பஸ் கவிழ்ந்து, 53 பேர் பலியாகினர். அப்பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு, பாலம் திறக்கும் சமயத்தில், 'இந்த ஆபத்தான வளைவுகளை அகற்றிவிட்டு, சாலை நேர்செய்யப்படும்' என கூறியிருந்தனர். சாலையும் முறையாக திறக்காமல், பயன்படுத்த தொடங்கியதோடு, வளைவுகளை நேர் செய்யும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
டிரைவர் பன்னீர்செல்வம், கைபேசியில் பேசியபடி, ஒற்றை கையில் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக, பாதிக்கப்பட்ட பயணிகள் கூறினர்.


