Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பணத்தகராறால் உறவினரே சுட்டுக்கொன்றது அம்பலம் : சுதிஷ்குமார் கொலையில் மைத்துனர் மகன் கைது

பணத்தகராறால் உறவினரே சுட்டுக்கொன்றது அம்பலம் : சுதிஷ்குமார் கொலையில் மைத்துனர் மகன் கைது

பணத்தகராறால் உறவினரே சுட்டுக்கொன்றது அம்பலம் : சுதிஷ்குமார் கொலையில் மைத்துனர் மகன் கைது

பணத்தகராறால் உறவினரே சுட்டுக்கொன்றது அம்பலம் : சுதிஷ்குமார் கொலையில் மைத்துனர் மகன் கைது

ADDED : ஆக 03, 2011 09:53 PM


Google News
Latest Tamil News

சென்னை : விடுதியில் தங்கியிருந்த, மின்பொருள்கள் விற்பனை வியாபாரியை பணத்தகராறில் அவரது உறவினரே சுட்டுக் கொன்றது அம்பலமாகியுள்ளது.

'நான் சுடவில்லை' என நாடகமாடிய மைத்துனர் மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஏழுகிணறு வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் சுதிஷ்சர்மா, 50; மின் பொருட்கள் மொத்த வியாபாரி. இவரது மனைவி மம்தாவின் அண்ணன் மகன் ஆசிஷ்சர்மா, இவர் உத்தரபிரதேசம், மதுராவைச் சேர்ந்தவர். சென்னை வரும்போது, யானைக்கவுனி பெருமாள் கோவில் தெருவில் உள்ள, ஜெயின் அமைப்பிற்கு சொந்தமான விடுதியில் தங்குவது வழக்கம்.

இரண்டு நாட்களுக்கு முன், சென்னை வந்த ஆசிஷ்சர்மா வழக்கம்போல், விடுதியில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்கச் சென்ற சுதிஷ்சர்மா, நள்ளிரவில் துப்பாக்கியால் சுடப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்ட விடுதி காவலர், சாதுர்யமாக அறையின் கேட்டை இழுத்து மூடி, போலீசிற்கு தகவல் கொடுத்தார். தப்பி ஓட முடியாமல், விடுதிக்குள் சிக்கிய ஆசிஷ்சர்மாவை போலீசார் கைது செய்தனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகையை பதிந்து, ஆய்வு செய்தனர்.

பூக்கடை துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் குமார் மற்றும் போலீசார், சிக்கிய ஆசிஷ்சர்மாவிடம் விசாரணையைத் துவக்கினர். 'நான் அவரைச் சுட வில்லை. நான் பாத்ரூம் சென்றிருந்த நேரத்தில், என் துப்பாக்கியை எடுத்து அவரே சுட்டுக் கொண்டார். எப்படி கையாளுவது என தெரியாததால், இந்த விபரீதம் நடந்திருக்கலாம்' என ஆசிஷ் சர்மா கூறினார்.

பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததை ஒப்புக் கொண்டதோடு, போலீசாரை குழப்பும் வகையில் தகவல்களை மாற்றி மாற்றி கூறினார். எனவே அதிரடிக்கு மாறிய போலீசார், தங்களது பாணியில் விசாரணை செய்த போது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னையில் உள்ள சுதிஷ்சர்மா, உத்தரபிரதேசத்தில் வியாபாரம் செய்து வரும் மைத்துனர் மகன் ஆசிஷ் சர்மாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தார். ஏற்கனவே, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, திரும்ப வராத நிலையில், சம்பவத்தன்று மேலும், ஐந்து லட்ச ரூபாய் கேட்டு சுதிஷ்சர்மாவை, ஆசிஷ் சர்மா தொந்தரவு செய்தார்.

'மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது. பணம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை', என சுதிஷ்சர்மா பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிஷ் சர்மா, தனது துப்பாக்கியால், சுதிஷ்சர்மாவை சுட்டு கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் தான் செய்த கொலையை ஆசிஷ் சர்மா ஒப்புக் கொண்டார். போலீசார் அவரைக் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிஷ் சர்மா வைத்திருந்த துப்பாக்கி உத்தரபிரதேச மாநிலத்தில் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வாங்கப்பட்ட அத்துப்பாக்கியை, அங்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தமிழகத்தில் அத்துப்பாக்கியை, பயன்படுத்தியதற்காக ஆசிஷ் சர்மா மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பு கிடைத்தது எப்படி? : சுட்டுக் கொல்லப்பட்ட சுதிஷ்சர்மாவின் உடல், கட்டிலில் கிடந்தது. துப்பாக்கி எதிரே உள்ள அலமாரியில் இருந்தது. தானே சுட்டுக் கொண்டார் என்றால், துப்பாக்கி எப்படி அலமாரி போனது என்பது போலீசாருக்கு துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, போலீசாரை குழப்பிய ஆசிஷ் சர்மா, ஒரு கட்டத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us